வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் தனது 4,501 தேவைக்கேற்ப கட்டித் தரப்படும் வீடுகளை நேற்று விற் பனைக்கு விட்டது.
இதன் பகுதியாக வீவக தனது புதிய முதன்மை வட்டார வீட்டுத் திட்டத்தின்கீழ் ரோச்சோர் பகுதியில் 960 வீடுகள் கட்டப்படும் என்று அறிவித்துள்ளது.
இந்த முதன்மை வட்டார வீட்டுத் திட்டத்தின்கீழ் வீடுகளை வாங்குவோர் அவற்றை விற்கும்போது அதன் விற்பனை விலையிலோ அல்லது விற்பனை செய்யும்போது அந்த வீடுகளின் விலை மதிப்பில், 6% தொகையை, இரண்டில் எது அதிகமோ அதை, கழகத்துக்கு திருப்பித் தரவேண்டும்.
இந்த வீடுகள் அனைத்தும் 6 குடியிருப்புப் பேட்டைகளில் கட்டப்படும். இந்த வீடுகளைக் கட்டி முடிக்க ஏறக்குறைய 4.4 ஆண்டுகள் எடுக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.
இவற்றுடன், ஏற்கெனவே விற் பனைக்கு விடப்பட்டபோதும் விற்கப்படாமல் இருந்த 1,798 வீடுகளும் நேற்று விற்பனைக்கு விடப்பட்டன.
நேற்றைய விற்பனை இவ்வாண்டின் இரண்டாம் மற்றும் கடைசி விற்பனை நடவடிக்கை என்று கழகம் தெரிவித்தது.
நேற்றைய விற்பனை நடவடிக்கையில் இந்த 1,798 வீடுகளையும் சேர்த்து மொத்தம் 6,299 வீடுகள் விற்பனைக்கு விடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய முதன்மை வட்டார வீட்டுத் திட்டத்தின்கீழ் ரோச்சோரில் கட்டப்படவுள்ள 'ரிவர்பீக்ஸ்1', 'ரிவர்பீக்ஸ் 11' வீடுகளை வாங்குவோர் சில கடுமையான நிபந்தனை களுக்கு உட்பட வேண்டும்.
நாற்பத்தியேழு மாடிகள் கொண்ட ஆறு புளோக்குகளில் 960 மூவறை, நான்கறை வீடுகள் கட்டப்படும். இவற்றில் ஒரு புளோக்கில், கிட்டத்தட்ட 40 வாடகை வீடுகளும் சேர்க்கப்படும்.
இந்த வீட்டுத் திட்டம் வெல்ட் ரோடு, கிளந்தான் ரோடு ஆகிய இடங்களை ஒட்டியுள்ள நிலப் பகுதிகளில் அமைந்திருக்கும்.
அத்துடன், இவை ஜாலான் புசார் ரயில் நிலையத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில், மானியங்களுக்கு முன்னர், மூவறை வீடு ஒன்றின் விலை $409,000லிருந்து தொடங்குகிறது. நான்கறை வீடுகளின் விலை $582,000லிருந்து தொடங்கும்.
இதனால், முதிர்ச்சியடைந்த பேட்டையில் இவையே ஆக அதிகமான விலை கொண்ட வீடுகளாக உள்ளன என்று கூறப்படுகிறது.
ரோச்சோரில் இந்த முதன்மை வட்டார திட்டத்தின்கீழ் வீடுகளை வாங்குவோர் அந்த வீடுகளை விற்கும்போது விற்பனை விலையில், அல்லது அதன் மதிப்பீட்டில் 6% தொகையை, எது அதிகமோ அதை, கழகத்துக்கு திருப்பித் தரவேண்டும்.
எனினும், இது முதல் முறை மறுவிற்பனை செய்வோருக்கு மட்டும்தான் என்றும் அதன்பின் விற்பனை செய்வோருக்குப் பொருந்தாது என்றும் கழகம் விளக்கம் அளித்துள்ளது.

