வேலைகள் குறித்த தற்கால, வருங்காலக் கவலைகளைச் சமாளிக்க, தொழிலாளர் இயக்கம் தன்னை உருமாற்றிக் கொள்ளவேண்டும் என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் கூறியுள்ளார்.
ஊழியர்களை வெற்றிபெற வைக்க, தொழிலாளர் இயக்கம், நிறுவனங்களுடன் இன்னும் அதிகமாக நேரடியாகப் பணியாற்றி அவற்றின் வர்த்தகங்களை மாற்றவேண்டும் என்று திரு ஹெங் கூறினார்.
வேலைச் சந்தையின் மாற்றத்துக்கு ஏற்ப, தொழிலாளர் இயக்கம் இன்னும் அதிகமானோருக்கு சேவையாற்ற வேண்டும். அதற்கு இயக்கம் இன்னும் அதிகமான ஊழியர்களை அணுகவேண்டும் என்று துணைப் பிரதமர் கூறினார்.
மேலும், ஊழியர்களின் வாழ்நாள் தேவைகளை இன்னும் முழுமையான முறையில் தொழிலாளர் இயக்கம் நிறைவுசெய்ய வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
தேசிய தொழிற்சங்கக் காங்கிரசின் சாதாரணப் பேராளர்கள் மாநாட்டில் துணைப் பிரதமர் கலந்து கொண்டு உரையாற்றினார்.
சென்ற 2019ஆம் ஆண்டில் கடைசியாக அந்த மாநாடு நடத்தப்பட்டது.
அதன் பிறகு, தொழிற்சங்க உறுப்பினர்களுக்கும் ஊழியர்களுக்கும் ஆதரவு அளிப்பதில் தொழிலாளர் இயக்கம் கண்ட முன்னேற்றம் பற்றி மாநாட்டில் ஆராயப்பட்டது.
'ரிசார்ட்ஸ் வேர்ல்ட் செந்தோசா' ஒருங்கிணைந்த சுற்றுலாத் தலத்தில் அந்த ஒருநாள் மாநாடு இடம்பெற்றது.
சுமார் 750 பேர் இணையம் வழியாகவும் 500 பேர் நேரடியாகவும் அதில் கலந்துகொண்டனர். பல்வேறு பாதுகாப்பு நடைமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டன.

