இவ்வாண்டின் தொடக்கப் பள்ளி இறுதியாண்டுத் தேர்வு முடிவுகள் அடுத்த புதன்கிழமை 24ஆம் தேதி வெளியிடப்படும். மாணவர்கள் தங்கள் வகுப்பறைகளுக்குச் சென்று தேர்வு முடிவுகளைப் பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சும் சிங்கப்பூர் தேர்வு மதிப்பீட்டுக் கழகமும் கூட்டாக வெளியிட்ட செய்தி அறிக்கையில் இதைத் தெரிவித்தன.
தேர்வு முடிவுகளை காலை 11 மணியிலிருந்து மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம். முடிவு களைப் பெற்றுக்கொள்ளும் மாணவர்களுடன் பெற்றோர் அல்லது காப்பாளர் ஒருவர் மட்டும் உடன் செல்லலாம் என்று அமைப்புகள் கூறின.
ஆனால் பெற்றோர் அல்லது காப்பாளர், வகுப்பறைகளுக்குள் அல்லது அவற்றின் அருகே அனு மதிக்கப்பட மாட்டார்கள்.
கூட்டநெரிசலையும் ஒன்று கூடுவதையும் தவிர்க்க, பிள்ளைகள் வகுப்பறைகளில் முடிவுகளைப் பெற்றுக் கொள்ளும்போது பெற்றோர் குறிப்பிடப்பட்ட இடங்களில் காத்திருக்க வேண்டும்.
"மாணவர்கள் நேரடியாகச் சென்று தேர்வு முடிவுகளைப் பெற்றுக் கொள்வது அவர்களின் கல்விப் பயணத்தில் முக்கிய அங்கம். அது சக வகுப்பு மாணவர்களுடன் ஒன்றாய் இருக்கவும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆசிரியர்களிடம் நேர்முக ஆலோசனை பெறவும் அவர்களுக்கு வாய்ப்பைத் தருகிறது," என்று அமைச்சும் கழகமும் கூறின.
உடல்நலமில்லாத மாணவர்கள், கொவிட்-19 கிருமித்தொற்றால் தனிமையில் இருப்பவர்கள் தேர்வு முடிவுகளைப் பெற நேரில் செல்லக் கூடாது என்று கூறப்பட்டது.
அவர்கள் இணையத்தளம் வழியாக தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.
சுகாதார அமைச்சின் சுகாதார அபாய எச்சரிக்கை பெற்றவர்கள், வரும் 23ஆம் தேதி அன்று விரைவுக் கிருமிப் பரிசோதனையைச் செய்தபின்னர் தொற்றில்லை எனத் தெரிந்தால், நேரில் சென்று முடிவு களைப் பெற்றுக் கொள்ளலாம்.