மின்னியல் சாலைக் கட்டணமுறை மாற்றத்தில் மீண்டும் தாமதம்
புதிய மின்னியல் சாலைக் கட்டணமுறைக்கு மாறும் திட்டம் மீண்டும் தாமதமாகியுள்ளது. உலகளவில் மின்னணுச் சில்லுகளுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறை இம்முறை தாமதத்துக்குக் காரணம்.
நிலப் போக்குவரத்து ஆணையம் நேற்று இதைத் தெரிவித்தது. இவ்வாண்டு இறுதியில் நடப்புக்கு வரவிருந்த அந்த மாற்றம், இனி வரும் 2023ஆம் ஆண்டு இரண்டாம் பாதியில் தொடங்கும் என்று அது கூறியது.
மின்னணுச் சில்லுகளின் பற்றாக்குறை அடுத்த ஆண்டு இறுதியிலிருந்து 2023ஆம் ஆண்டு தொடக்கத்தில்தான் முடிவுக்கு வரும் என்று ஆணையம் தெரிவித்தது.
வாகனங்களில் புதிய மின்னியல் சாலைக் கட்டணச் சாதனங்களைக் கடந்தாண்டு பொருத்தவேண்டும் என்றுதான் தொடக்கத்தில் திட்டமிடப்பட்டது. ஆனால் கொவிட்-19 கிருமிப் பரவலால் அது தள்ளிப்போனது.
பாதுகாப்பு இடைவெளி இல்லாத பெரிய அளவிலான இசை நிகழ்ச்சி
மாண்டரின் பாப் இசைக்கலைஞர் ஜேஜே லின் இம்மாதம் நடத்தவிருக்கும் இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்கள் ஒரு மீட்டர் பாதுகாப்பு இடைவெளி விட்டு அமரத் தேவையில்லை. சில குறிப்பிட்ட நிகழ்ச்சிகளில் கிருமிப் பரவலுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தளர்த்தும் அரசாங்க நடவடிக்கையின்கீழ், அந்த நிகழ்ச்சி சில தளர்வுகளுடன் நடத்தப்படும்.
ஆனால் நிகழ்ச்சிக்குச் செல்பவர்கள் ஏற்பாட்டாளர்களின் முன்னிலையில் கிருமிப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்பது போன்ற வேறு சில கட்டுப்பாடுகளுண்டு.
மாணவர்களே வழிநடத்தும்
நச்சு மென்பொருள் ஆய்வு நிலையம்
இணைய நச்சுப் மென்பொருள்கள் பகுப்பாய்வுக்கான புதிய நிலையம் ஒன்று தெமாசெக் பலதுறைத் தொழில்கல்லூரியில் திறக்கப்பட்டுள்ளது. நிலையத்தை மாணவர்களே நடத்துகின்றனர். நச்சு மென்பொருள்களைக் கண்டறிந்து அவற்றை நீக்கும் பயிற்சியில் இணையப் பாதுகாப்புத் துறை மாணவர்கள், நிலையத்தில் கூடுதல் வளங்களைப் பெறுவர்.
நிலையத்தை நடத்தும் மாணவர்கள், பாதுகாப்பு மேலாளர்கள், நிபுணர்கள் ஆகியோரின் பணியைச் செய்து, உண்மையான மென்பொருள் பிரச்சினைகளை தீர்ப்பார்கள்.
தொடர்பு, தகவல் அமைச்சுக்கான மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஜனில் புதுச்சேரி நேற்று நிலையத்தைத் திறந்துவைத்தார்.
இந்திய வெளிநாட்டு ஊழியர் மரணம்
பூன் லேயில் உள்ள கட்டுமானத் தளம் ஒன்றில் நான்கு மாடி உயரத்திலிருந்து கடந்த திங்கட்கிழமை 15ஆம் தேதி கீழே விழுந்த வெளிநாட்டு ஊழியர் ஒருவர் உயிரிழந்தார்.
எண் 22 சின் பீ சாலையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக மனிதவள அமைச்சு தெரிவித்தது.
இந்திய நாட்டவரான அந்த 35 வயது ஊழியர், 'சக்சஸ் எஞ்சினியரிங் அண்ட் ஸ்டீல்' நிறுவனத்தைச் சேர்ந்தவர்.
அப்பகுதியில் கட்டப்பட்டு வரும் கட்டடம் ஒன்றில் அவர் வேலை செய்துகொண்டிருந்தார். அந்தக் கட்டடத்தின் நான்காவது தளத்திலிருந்து 'பூம் லிஃப்ட்' இயந்திரத்தில் அவர் ஏற முற்பட்டபோது, நழுவிக் கீழே விழுந்தார்.
இங் டெங் ஃபோங் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட அவர், காயங்களால் அங்கு உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து மனிதவள அமைச்சு விசாரணை நடத்தி வருகிறது. அந்தக் கட்டுமானத் தளத்தில் வேலை நிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
புதிதாக 2,069 பேருக்குத் தொற்று
சிங்கப்பூரில் புதிதாக 2,069 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. சமூகத்தில் 2,021 பேரும் வெளிநாட்டு ஊழியர் விடுதிகளில் 43 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூர் வந்தவர்களில் ஐவருக்குத் தொற்று உறுதியானது. சுகாதார அமைச்சு நேற்று முன்தினம் இரவு இதைத் தெரிவித்தது.
வாராந்திர தொற்று பரவல் விகிதம் 0.88ஆகக் குறைந்தது. திங்கட்கிழமை அது 0.94ஆக இருந்தது.
இதற்கிடையே, கொவிட்-19 தொற்றால் ஏற்பட்ட உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக மேலும் 18 பேர் உயிரிழந்துவிட்டனர். அவர்கள் 67 முதல் 95 வயதிற்குட்பட்டவர்கள். அவர்கள் அனைவருக்கும் பல்வேறு மருத்துவப் பிரச்சினைகள் இருந்தன.