நாட்டின் மின்னிலக்கப் பொருளியலுக்கு முக்கிய அம்சமாகக் கருதப்படும் '5ஜி' திறன்களை, வளர்க்க வேண்டும் என்ற தேசிய திட்டத்தின் கீழ் 3,000க்கும் மேற்பட்ட சிங்கப்பூரர்கள் பயிற்சி பெற்றுள்ளதாக தொடர்பு, தகவல் அமைச்சர் ஜோசஃபின் டியோ நேற்று தெரிவித்தார்.
இது எதிர்பார்த்ததைவிட துரிதமாக ஏற்பட்ட முன்னேற்றம் என்றார் அவர். இதற்கு 12 உயர் கல்வி நிலையங்கள் மற்றும் தொழில்துறைப் பங்காளிகளின் ஒருங்கிணைந்த முயற்சியே காரணம் என்றார்.
2023ஆம் ஆண்டுக்குள் 5,000 '5ஜி' நிபுணர்களுக்குப் பயிற்சி அளித்திட வேண்டும் என்ற திட்டத்தை அரசாங்கம் கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிவித்தது.
மின்னிலக்கமயமாவதில் '5ஜி', செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பங்கள் முக்கிய அம்சங்கள் என்று நேற்று சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் திருவாட்டி டியோ பேசியிருந்தார்.
'5ஜி' கட்டமைப்பு 2025ஆம் ஆண்டுக்குள் சிங்கப்பூர் முழுவதும் பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், '5ஜி' தீர்வுகளுக்கான முன்னோட்டத் திட்டங்கள் பலவற்றை தனியார், பொதுத் துறையினர் தொடங்கியுள்ளனர்.
இதையடுத்து, '5ஜி'யில் பயிற்சி பெற்றுள்ள 3,000 உள்ளூர்வாசிகளால் மேலும் துடிப்புமிக்க ஓர் '5ஜி' கட்டமைப்பை உருவாக்கித் தர முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார் அமைச்சர் டியோ.