அடுத்த கொள்ளைநோய்க்கு உலகைத் தயார்ப்படுத்த, அரசாங்கத்திற்கும் வர்த்தகத் துறைக்கும் மேலும் வலுவான ஒத்துழைப்பு தேவைப்படுவதாக மூத்த அமைச்சரும் சமுதாயக் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான தர்மன் சண்முகரத்னம் தெரிவித்துள்ளார்.
ஆய்வு, உற்பத்தி, விநியோகத் திறனை நாடுகள் மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார் அவர். கொள்ளைநோய் தொடர்பில் தனியார் துறை தனித்து இயங்கி தேவையானதை வழங்க முடியாத நிலையில், பொதுத்துறை நிதிகள் தேவைப்படுகின்றன.
இதன் மூலம் ஆய்வு, உற்பத்தி வசதிகளை முன்தயாரிப்பாக உருவாக்கிவிடலாம் என்றார் அவர்.
"முன்னதாகவே தயார்ப்படுத்திக்கொள்வதற்கு ஆகும் செலவு, தயார்ப்படுத்தாத நிலையுடன் ஒப்பிடுகையில் எல்லையற்றது. கொவிட்-19 தொற்றிலிருந்து கற்றுக்கொண்ட பாடம் அதுவே," என்று 'புளூம்பெர்க் நியூ எகனாமி' கருத்தரங்கில் திரு தர்மன் குறிப்பிட்டார். எனவே, அனைத்துலக ஒத்துழைப்பு தேவைப்படுவதாகவும் அத்தகைய ஒத்துழைப்பு இல்லாத சூழலுடன் ஒப்பிடுகையில் நேரும் செலவு கணக்கில் அடங்கா என்றும் அவர் கூறினார்.