'போன்ஸி' திட்டத்தைப் பயன்படுத்தி 54 வயது ஜெயா ரெத்தினசாமி காந்தி, 22 பேரிடம் இருந்து மொத்தம் $700,000ஐ மோசடி செய்துள்ளார். 2016ஆம் ஆண்டுக்கும் 2018ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இந்த 22 பேரும் ஜெயாவை நம்பிப் பணம் கொடுத்திருந்தனர்.
விமானப் பயணச்சீட்டுகள், அந்நியச் செலாவணி நாணயங்கள் போன்றவற்றை ஜெயா தங்களுக்கு வழங்குவார் என்ற நம்பிக்கையில் அந்த 22 பேரும் இவ்வாறு செய்திருந்தனர்.
குற்றம் புரிந்த காலகட்டத்தில், சிங்கப்பூரரான ஜெயா, பயண நிறுவனம் அல்லது நாணய பரிவர்த்தனை வர்த்தகம் நடத்தும் உரிமம் ஏதும் வைத்திருக்கவில்லை.
ஜெயாவுக்கு நேற்று ஈராண்டுக்கு மேலான சிறைத் தண்டனையும் $5,000 அபராதமும் விதிக்கப்பட்டது. ஷோபகுணசேகரன் என்பவர் சார்பில் கடன் நிறுவனம் ஒன்றிடமிருந்து 2014ல் ஜெயா $300,000 கடன் வாங்கினார். பணத்தை அவரின் காதலரிடம் கொடுத்தார். இருப்பினும், அந்த நபர் பணத்தைப் பெற்றுக் கொண்டு மாயமானார்.
இதனால் நிதி நெருக்கடியில் சிக்கினார் ஜெயா. 2013ல் தொடங்கிய தனது பயண நிறுவனத்தை 2014ஆம் ஆண்டில் மூடினார். இருப்பினும், அதில் பெற்ற அனுபவத்தைப் பயன்படுத்தி, பலரையும் ஏமாற்றித் தனது கடனைக் கட்டி முடித்தார்.
மோசடிக்கு ஆளானவர்கள் புகார் அளித்ததை அடுத்து ஜூலை 2017ல் போலிசார் தங்களின் விசாரணையைத் தொடங்கினர். விசாரணையில் இருந்த நிலையிலும், ஜெயா தனது மோசடித் திட்டத்தைத் தொடர்ந்தார்.
தண்டனையை நிறைவேற்றத் தொடங்குவதற்கு அடுத்த மாதம் 29ஆம் தேதியன்று நீதிமன்றத்தில் ஜெயா சரணடையவேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.