பொதுக் கழிவறைகளுக்கு வரும் மற்ற ஆண்களைப் படமும் காணொளியும் எடுத்த குற்றச்சாட்டை 21 வயது லிம் ஸு ஷெங் ஷோன் நேற்று நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
வெவ்வேறு கடைத்தொகுதிகள், இதர பொது இடங்களில் அமைந்துள்ள கழிவறைகளுக்குள் சென்று மொத்தம் 15 ஆடவர்களை லிம் குறிவைத்து 13 படங்களும் 19 காணொளிகளும் எடுத்துள்ளதாகக் கூறப்பட்டது. பதிவு செய்ததைச் சில நாட்கள் கழித்துப் பார்த்துவிட்டு நீக்கிவிடுவதாக லிம் குறிப்பிட்டார்.
பொதுவாக, சிறுநீர் கழிக்கும் ஆடவருக்குப் பக்கத்தில் நின்றவாறு லிம் தன்னுடைய கைபேசியைக் கொண்டு பதிவுசெய்ததாகக் கூறப்பட்டது. லிம்முக்கு அடுத்த மாதம் 15ஆம் தேதியன்று தண்டனை விதிக்கப்படும்.
வேறொரு சம்பவத்தில், பள்ளிக் கழிவறையைப் பயன்படுத்தும் தன்னுடைய பெண் நண்பர்களைப் படமெடுக்கும் நோக்கில் மிகச் சிறிய கேமராவைக் கொண்ட கறுப்புநிற பேனா ஒன்றை 17 வயது மாணவன் ஒருவர் கதவு மீது பொருத்தினார். கழிவறைக்குச் சென்ற ஒரு மாணவி, பேனாவைக் கண்டுபிடிக்க, மாணவனின் குற்றம் அம்பலமானது.
வயது காரணத்தால் மாணவனின் விவரங்கள் வெளியிடப்படவில்லை. எம்ஆர்டி நிலையங்களில் 2019ஆம் ஆண்டிலிருந்து அந்த மாணவன் பெண்களின் பாவாடைக்குள் படமெடுத்துள்ளதாகவும் அரசுத் தரப்பு வழக்கறிஞர் குறிப்பிட்டார்.