தத்தெடுத்து வளர்த்த பெண் பிள்ளையை பல ஆண்டுகாலம் பாலியல் வதை செய்த ஆடவருக்கு 32 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. 50 வயதைக் கடந்தவர் என்பதால் பிரம்படிக்குப் பதிலாக அவருக்குக் கூடுதலாக 10 வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
வயது குறைந்த சிறுமியை மானபங்கம் செய்த குற்றத்தையும் மானபங்கம் தொடர்பான மற்றொரு குற்றத்தையும் அவர் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து தண்டனை அறிவிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட சிறுமி 2009ஆம் ஆண்டில் ஆறு வயதாக இருந்தபோது தம் தந்தை என்று நம்பிய ஆடவரால் முதன்முதலாக பாலியல் சீண்டலுக்கு ஆளானார். அது பல ஆண்டுகளுக்குத் தொடர்ந்தது.
இருப்பினும் கடந்த ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி தமது பள்ளியின் தலைமை ஆசிரியரிடமும் ஆலோசகரிடமும் தாம் அனுபவித்து வந்த பாலியல் வதை குறித்து அவர் தெரிவித்ததைத் தொடர்ந்து காவல்துறையில் புகார் தெரிவிக்கப்பட்டது.
அப்போதுதான் தாம் தத்தெடுக்கப்பட்ட பிள்ளை என அச்சிறுமிக்குத் தெரியவந்ததாக நீதிமன்ற ஆவணங்கள் கூறின.
தற்போது 65 வயதாகும் அந்த ஆடவர் கைது செய்யப்படும்வரை தன் மனைவியுடன் சேர்ந்து உணவுக்கடை நடத்தி வந்தார். 2014ஆம் ஆண்டு தொடக்கநிலை 5ல் பாலியல் கல்வி கற்றபோதுதான் பாலியல் வதை செயல்கள் குறித்து அச்சிறுமிக்குத் தெரியவந்தது.