இயற்கையான நோய் எதிர்ப்புசக்தி, தடுப்பூசி மூலம் கிடைக்கும் நோய் எதிர்ப்புசக்தி, மருந்துகள் ஆகியவற்றால் கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் மாண்டோர் எண்ணிக்கையும் அதிக அளவில் குறைந்து வருவதாக திரு பில் கேட்ஸ் நேற்று தெரிவித்தார்.
அடுத்த ஆண்டு கோடைக்
காலத்துக்குள் பருவத்துக்குப் பருவம் வரும் சளிக்காய்ச்சல் பிரச்சினையால் ஏற்படும் பாதிப்பு, மரண எண்ணிக்கைக்குச் சமமாக அல்லது அதற்குக் குறைவாக கொவிட்-19 பாதிப்பு, மரணங்கள் பதிவாகக்கூடும் என்றார் அவர்.
இந்த நிலை ஏற்பட்டதும் வழக்கமான பொருளியல் நடவடிக்கைகள் முழுமையாகத் தொடரக்கூடும் என்று சிங்கப்பூரில் நடைபெறும் புளூம்பெர்க் புதிய பொருளியல் கருத்தரங்கில் திரு கேட்ஸ் தெரிவித்தார். சீனா செய்தது போல கிருமித்தொற்று ஏற்பட்டால் அதை உடனடியாகக் கண்டுபிடித்து எல்லைகளை மூடும் ஆற்றல் உள்ள நாடுகள் பல பாதிப்புகளைத் தவிர்க்கலாம் என்றார் அவர்.
ஆனால் இத்தகைய தீவிரமான நடவடிக்கைகளை எடுக்கும்போது அவற்றுக்கான விளைவுகளைச் சந்தித்தாக வேண்டும் என்று திரு கேட்ஸ் கூறினார்.
"கிருமிப் பரவலை உடனடி
யாகக் கண்டுபிடித்து உடனே எல்லைகளை மூடும் நாட்டின் மக்களுக்கு மிகக் குறைவான இயற்கை நோய் எதிர்ப்புசக்தி இருக்கும். எனவே, வெளிநாட்டவர்களை நாட்டுக்குள் அனுமதிப்பதற்கு முன்பு தடுப்பூசி போடும் திட்டத்தை அது மிக விரைவாக விரிவுபடுத்த வேண்டும்.
"வெளிநாட்டவர்கள் நாட்டுக்குள் வரத் தடை விதிப்பதை நீண்ட
காலத்துக்கு நடைமுறைப்படுத்துவது மிகவும் சிரமம்.
"தடுப்பூசி போட்டுக்கொண்டோர் விகிதம் அதிகரித்திருப்பதால் அனைத்துலகப் பயணங்
களால் ஏற்படும் நன்மைகளைக் கருதி, பல நாடுகள் அவற்றின் எல்லைகளைத் திறந்துள்ளன," என்றார் திரு கேட்ஸ்.
அண்மையில் கிளாஸ்கோவில் நடந்த COP26 பருவநிலை மாற்றம் தொடர்பான பேச்சுவார்த்தையில் பலர் முகக்கவசம் அணியாமல் இருந்ததைத் திரு கேட்ஸ் சுட்டினார். இந்த மெத்தனப்போக்கு காரணமாக பிரிட்டனில் தற்போது கொவிட்-19 பாதிப்பு அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
குளிர்காலம் நெருங்கும் வேளையில், பிரிட்டனில் கொவிட்-19
கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் அந்நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் மற்ற ஐரோப்பிய நாடு
களைவிட ஆறு மடங்கு அதிகம் உயர்ந்துள்ளன.
எதிர்காலத்தில் வேறு வகை கிருமித்தொற்றுகள் ஏற்பட்டால் அவற்றை எதிர்க்கத் தயாராக இருப்பதற்கு முதலீடு செய்ய நாடுகளை ஊக்குவிப்பது சவால்மிக்கப் பணியாகும் என திரு கேட்ஸ் கூறினார். ஆனால் அவற்றை எதிர்கொள்ள தயாராக இல்லாவிட்டால் மோசமான விளைவுகளைச் சந்திக்க வேண்டிவரும் என்பதை அரசாங்கங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றார் அவர்.
"கொவிட்-19 கிருமித்தொற்றால் ஏற்பட்ட இழப்புகளும் பொருள் செலவும் அதிகம். அதுமட்டுமல்லாது கிருமித்தொற்று காரணமாக மில்லியன் கணக்கானோர் மாண்டுவிட்டனர். இதை நினைவில் கொள்ள வேண்டும். எனவே, வருமுன் காக்கும் அணுகுமுறைதான் ஆகச் சிறந்த தீர்வாகும்," என்று திரு கேட்ஸ் வலியுறுத்தினார்.