கொவிட்-19 தடுப்பூசியைப் பகிர்ந்து கொள்ளும் ஏற்பாட்டின்கீழ் ஏறத்தாழ 500,000 ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசி மருந்துகளை
சிங்கப்பூரிடம் ஆஸ்திரேலியா திருப்பிக் கொடுத்துள்ளது.
இந்தத் தடுப்பூசி மருந்துகளைக் கடந்த செப்டம்பர் மாதம் 2ஆம் தேதியன்று ஆஸ்திரேலியாவுக்கு சிங்கப்பூர் அனுப்பி வைத்திருந்தது.
அப்போது கொவிட்-19 டெல்டா வகை கிருமிப் பரவலால் ஆஸ்திரேலியா வெகுவாகப் பாதிக்கப்
பட்டிருந்தது.
சிங்கப்பூருடன் செய்துகொண்ட தடுப்பூசி பகிர்ந்துகொள்ளும் திட்டத்தின் மூலம் செப்டம்பர் மாதம் நடுப்பகுதியிலிருந்து தடுப்பூசி போடும் திட்டத்தை விரைவுபடுத்தவும் 12 வயதுக்கும் 15 வயதுக்கும் இடைப்பட்ட சிறாருக்கும் தடுப்பூசி போடும் திட்டத்தை விரிவுபடுத்தவும் முடியும் என்றும் ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிசன் அப்போது தெரிவித்திருந்தார்.
ஆஸ்திரேலியாவின் தடுப்பூசி போடும் திட்டத்துக்கு உதவுவதில் மகிழ்ச்சி அடைவதாக பிரதமர் லீ சியன் லூங் அப்போது தெரிவித்திருந்தார். தற்போது ஆஸ்திரேலியாவின் மக்கள்தொகையில் 70 விழுக்காட்டினர் தடுப்பூசி
போட்டுக்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், சிங்கப்பூரில் தடுப்பூசி போடும் திட்டம் தொடர்வதாகவும் சிங்கப்பூருக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ள தடுப்பூசி மருந்துகள் சிங்கப்பூரர்களுக்குப் பயன்படுத்தப்படும் என்றும் வெளியுறவு அமைச்சு நேற்று தெரிவித்தது.
தற்போதைய நிலவரப்படி, சிங்கப்பூரின் மக்கள்தொகையில் 21 விழுக்காட்டினர் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.
மக்கள்தொகையில் 94 விழுக்காட்டினர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.
இந்தத் தடுப்பூசி பகிர்ந்துகொள்ளும் திட்டம் சிங்கப்பூருக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான வலுவான நல்லுறவைப் பறைசாற்று வதாக வெளியுறவு அமைச்சு கூறியது.
"கொவிட்-19 நெருக்கடிநிலையின்போது இரு நாடுகளும்
கிருமிப் பரவலைத் தடுக்க நடை
முறைப்படுத்தப்பட்ட சிறந்த
அணுகுமுறைகளைப் பகிர்ந்துகொண்டன. இருநாடுகளுக்கு இடையிலான விநியோகங்கள் தொடர்வதும் உறுதி செய்யப்பட்டது. அத்துடன், பயணிகளைத் தனிமைப்படுத்த தேவையில்லாத இருவழிப் பயணத்தை மீண்டும் தொடங்க இருநாடுகளும் இணைந்து செயல்பட்டன," என்று அமைச்சு கூறியது.
நாளை மறுநாள் முதல் தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான பயணத் தட ஏற்பாட்டின்கீழ் சுற்றுப் பயணிகள், ஊழியர்கள், மாணவர்கள் ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா ஆகிய
மாநிலங்களுக்குப் பயணம் செய்யலாம். அவர்கள் தனிமைப்படுத்தப்பட மாட்டார்கள்.