செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
b041a700-a84b-4c99-9a96-cc81b5b24c28
-

மீண்டும் இணைந்து பயிற்சி செய்த சிங்கப்பூர்-இந்தோனீசிய ராணுவம்

கொவிட்-19 நெருக்கடிநிலைக்குப் பிறகு முதல்முறையாக சிங்கப்பூர் ராணுவ வீரர்களும் இந்தோனீசிய ராணுவ வீரர்களும் மீண்டும் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தப் பயிற்சி லிம் சூ காங்கில் உள்ள முராய் நகர்ப்புற பயிற்சி முகாமில் நேற்று காலை நடைபெற்றது.

கடந்த ஒரு வாரமாக இணைந்து பயிற்சியில் ஈடுபட்டது மட்டுமல்லாது, இருதரப்பினருக்கும் இடையே நிபுணத்துவப் பரிமாற்றங்களும் இடம்பெற்றதாகத் தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.

"இரு நாட்டு ராணுவத்துக்கும் இடையே உள்ள பரஸ்பர புரிந்துணர்வை வலுப்படுத்த இந்தப் பயிற்சி வாய்ப்பளித்தது," என்று தற்காப்பு அமைச்சு கூறியது.

33வது முறையாக நடத்தப்படும் 'சஃப்கார் இந்தோபுரா' ராணுவப் பயிற்சியில் ஏறத்தாழ 150 வீரர்கள் பங்கெடுத்தனர்.

2019ஆம் ஆண்டில் நடைபெற்ற பயிற்சியில் 470 வீரர்கள் ஈடுபட்டனர். இவ்வாண்டு நடத்தப்பட்ட பயிற்சியில் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட வீரர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. அதுமட்டுமல்லாது, பயிற்சியின்போது கொவிட்-19 பரிசோதனை போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.

மேலும் 3,474 பேருக்கு

கொவிட்-19; ஏழு பேர் மரணம்

சிங்கப்பூரில் நேற்று முன்தின நிலவரப்படி மேலும் 3,474 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை பதிவான 2,069 பேரைவிட இது அதிகம்.

நோய்வாய்ப்பட்டோரில் 3,320 பேருக்குச் சமூக அளவில் பாதிப்பு ஏற்பட்டது. வெளிநாட்டு ஊழியர்களுக்கான தங்குவிடுதிகளில் 144 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டது.

வெளிநாடுகளிலிருந்து வந்த 10 பேருக்குக் கிருமித்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

சமூக அளவில் பாதிப்படைந்தவர்களில் 506 பேர்

60 வயதுக்கும் மேற்பட்ட மூத்தோர். சிங்கப்பூரில்

கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 244,815ஆக அதிகரித்துள்ளது.

கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட 1,468 நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 242 பேருக்கு உயிர்வாயுக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

சீரற்ற உடல்நலம் கொண்ட 48 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர்.

64 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. அவர்களுக்குச் செயற்கை சுவாசக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

கொவிட்-19 காரணமாக நேற்று முன்தினம் ஏழு பேர் மாண்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. மாண்டோர் 47 வயதுக்கும் 83 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். அவர்கள் அனைவருக்கும் ஏற்கெனவே வேறு உடல்நலப் பிரச்சினைகள் இருந்ததாக அமைச்சு தெரிவித்தது.

பொருளியல் ஒத்துழைப்பு

குறித்து கலந்துரையாடல்

இந்தோ-பசிஃபிக் வட்டாரத்தில் பொருளியல் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது தொடர்பாக ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளின் அமைச்சர்களை வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங் நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினார்.

கலந்துரையாடலில் ஈடுபட்ட அனைத்து நாடுகளும் பலன் அடையும் வகையில் பொருளியல் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகளைப் பற்றி ஆஸ்திரேலியாவின் வர்த்தக, சுற்றுப்பயணத் துறை, முதலீட்டுத் துறை அமைச்சர் டேன் டெஹன், நியூசிலாந்தின் வர்த்தக மற்றும் இறக்குமதி வளர்ச்சி அமைச்சர் டேமியன் ஓ' கோனர், அமெரிக்க வர்த்தக அமைச்சர் ஜினா ராய்மொண்டோ ஆகியோருடன் திரு கான் கலந்துரையாடினார்.

பொருளியல் உறவுகளை வலுப்படுத்துவது, நாடுகளுக்கிடையிலான தொடர்புகளை மேம்படுத்துவது, பருவநிலை மாற்றம் தொடர்பான சவால்களை எதிர்கொள்வது, கொவிட்-19 நெருக்கடிநிலைக்குப் பிந்திய சவால்களைச் சமாளிப்பது போன்றவை குறித்து அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

விநியோக மீள்திறனை மேம்படுத்தவும் உள்கட்டமைப்புக்கான முதலீடுகளை அதிகரிக்கவும் மின்னிலக்க மற்றும் பசுமைத்திட்ட பொருளியல்களை வளர்ச்சியடையச் செய்யவும் கலந்துரையாடலில் ஈடுபட்ட அமைச்சர்கள் இணக்கம் தெரிவித்தனர்.

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்தோ-பசிஃபிக் பொருளியல் கட்டமைப்பு அறிமுகப்படுத்தப்படக்கூடும் என்று அமெரிக்க வர்த்தக அமைச்சர் ராய்மொண்டோ கூறினார்.