நிதி திரட்டுவதிலும் தொண்டூழிய நடவடிக்கைகளிலும் கொவிட்-19 கொள்ளைநோய் கட்டுப்பாடுகள் குறுக்கிட்டபோதிலும் 93 அமைப்புகளுக்கு உதவ $13 மில்லியனுக்கும் மேல் நிதி திரட்டுவதில் 'அதிபர் சவால் 2021' முனைப்புடன் ஈடுபட்டு வருவதாக அதிபர் ஹலிமா யாக்கோப் தெரிவித்துள்ளார்.
தேவையுள்ள சமூகத்திற்கு உதவ இந்த நிதி திரட்டப்படு வதாகவும் அவர் கூறினார்.
2018ஆம் ஆண்டு அதிபர் சவால் அறப்பணித் திட்டம் இஎல்எஃப் என்னும் நிதியத்தைத் தொடங்கியது. 2022 இறுதிக்குள் $10 மில்லியன் நிதி திரட்ட இந்த நிதியம் இலக்கு வகுத்திருந்த
போதிலும் அந்த இலக்கிற்கும் மேலான தொகையை அது ஏற்கெனவே எட்டிவிட்டது. இது திரட்டிய நிதிக்கு நிகராக அரசாங்கமும் நிதி வழங்கியதைத் தொடர்ந்து மொத்தத் தொகை $21 மில்லியனுக்கும் மேல் திரண்டது.
நீடித்து நிலைத்திருக்கக்கூடிய வேலைவாய்ப்புக்கு உதவி வழங்கும் இந்த நிதியம் 2018 முதல் 21 திட்டங்களுக்கு $10 மில்லியனுக்கு மேல் செலவிட்டிருக்கிறது.
இவற்றின் மூலம் பலனடைந்தவர்களில் பெரும்பாலானோர் சிரமங்களை அனுபவித்தவர்கள். குறிப்பாக உடற்குறை உள்ளோர், மனநலப் பிரச்சினை உள்ளோர் மற்றும் பெண்கள் ஆகியோர் பலனடைந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.
"உதவித் திட்டங்களில் பங்கேற்று வேலைவாய்ப்புப் பயிற்சி பெற்றவர்களில் கிட்டத்தட்ட முக்கால்வாசிப் பேருக்கு அடுத்தடுத்து வேலை கிடைத்துவிட்டது. அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் ஆறு மாதங்களைக் கடந்து வேலையில் உள்ளனர்," என்றார் திருவாட்டி ஹலிமா.
இஸ்தானாவில் நேற்று நடைபெற்ற அதிபர் சவால் 2021 பாராட்டு நிகழ்வில் பங்கேற்று அவர் உரையாற்றினார்.
77 நன்கொடையாளர்கள், பங்காளிகள் மற்றும் தொண்டூழியர்
களின் பங்களிப்புக்கு நன்றி கூறும் விதமாக இந்நிகழ்வு நடைபெற்றது.
கெப்பல் கிளப், ஷெங் சியோங் குழுமம், என்டியுசி ஃபேர்பிரைஸ் அறநிறுவனம், மக்கள் கழகம் உள்ளிட்டவை பாராட்டு பெற்றன.

