சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் (எஸ்பிஎச்) நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் சிலர் இந்நிறுவனம் இப்போதிருப்பதுபோல் தனித்து இயங்கலாம் அல்லது வேறு பெயரைப் பங்குச் சந்தையில் பதிவு செய்து தொடரலாம் என கருத்துத் தெரிவித்துள்ளனர்.
கெப்பல் கார்ப் மற்றும் கஸ்கடன் பீக் போன்ற பெருநிறுவனங்களின் போட்டி, ஊடக வர்த்தகத்தைக் கைவிட்ட பின்னர் துடிப்புள்ள வர்த்தக நிறுவனமாக எஸ்பிஎச் உருவெடுப்பதையே காட்டுகிறது என்று பங்குதாரர்கள் தரப்பில் தெரிவிக் கப்பட்டுள்ளது.
'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' செய்தித்தாளை வெளியிடும் எஸ்பிஎச், கடந்த புதன்கிழமை நடைபெற்ற அதன் ஆண்டு பொதுக்கூட்டத்திற்கு முதல் நாள் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தது.
"எங்களுக்கு என்று தனி வர்த்தகச் சின்னமும் உத்தியும் உள்ளன. நியாயமான குறுகி காலத்தில் எங்களால் சாதிக்க முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது," என்று எஸ்பிஎச் கூறியுள்ளது.
ஊடகப் பிரிவைத் தவிர்த்து தற்போது எஸ்பிஎச் நடத்தி வரும் எல்லா வர்த்தகங்களும் 2021 நிதி ஆண்டில் முன்னேற்றம் கண்டுள்ளதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.

