வேலையிடக் கற்றலை மேம்படுத்த எட்டு நிறுவனங்களின் முயற்சி
வேலையிடக் கற்றலை மேம்படுத்தும் நோக்குடன் 'என்யூஹெச்எஸ்' எனப்படும் தேசிய பல்கலைக் கழக சுகாதார முறை, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட எட்டு அமைப்புகள் 'ஐஏஎல்' எனும் பெரியவர்களுக்கான கற்றல் கழகத்துடன் சில ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன. இதன்படி அடுத்த மூவாண்டுகளில் 'ஐஏஎல்', சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக் கழகம் ஆகியவற்றுடன் இணைந்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத் துறை தொடர்பிலான பயிற்சிகளை உருவாக்கும்.
கிருமிப் பரவலால் உள்ளூர் மற்றும் உலகப் பொருளியல்களில் ஏற்பட்டுள்ள பெரிய, அடிப்படை மாற்றங்கள், வேலையிடக் கற்றலின் முக்கயத்துவத்தை எடுத்துக்காட்டுவதாகக் கல்வி அமைச்சர் சான் சுன் சிங் குறிப்பிட்டார்.
செயின்ட் ஜேம்ஸ் செல்லும் டைசன்
தொழில்நுட்ப நிறுவனமான டைசன், செயின்ட் ஜேம்ஸ் மின்சார நிலையப் பகுதிக்கு இடம் மாறத் தொடங்கியுள்ளது. அங்குதான் நிறுவனத்தின் புதிய உலகளாவியத் தலைமையகம் அமைந்துள்ளது. புதிய தலைமையகம் அடுத்த ஆண்டு அதிகாரபூர்வமாகத் திறக்கப்படும்.
வரலாற்றுச் சிறப்புமிக்க செயின்ட் ஜேம்ஸ் கட்டடத்திற்கு தாங்கள் மீண்டும் உயிரூட்டுவதில் பெருமையடைவதாகச் சொன்னார் டைசனின் தலைமை நிர்வாகி திரு ரோலண்ட் குரூகர். செயின்ட் ஜேம்ஸ் மின்சார நிலையக் கட்டடத்தைத் தனது புதிய தலைமையகமாக மாற்றுவது குறித்து டைசன் 2019ஆம் ஆண்டில் அறிவித்தது.
815 மில்லியன் வெள்ளிக்கு
விலை போன நிலம்
சிங்கப்பூர் சொத்து மேம்பாட்டு நிறுவனமான ஹோய் ஹப் ரியல்ட்டி, மலேசியாவின் பெரிய நிறுவனமான சன்வே ஆகியவை சிங்கப்பூரின் மையப் பகுதியான டிஸ்ட்ரிட் 15ல் அமைந்திருக்கும் 'ஃப்ரீஹோல்ட்' எனப்படும் குத்தகை இல்லாத இரண்டு நிலங்களை 815 மில்லியன் வெள்ளிக்கு வாங்கியுள்ளன. கடந்த மூவாண்டுகளில் வீடுகளைக் கட்டுவதற்கான எந்த நிலமும் ஒரே பரிவர்த்தனையில் இவ்வளவு அதிக விலைக்கு விற்கப்படவில்லை.
வாங்கப்பட்ட இரண்டு நிலங்களிலும் மொத்தம் 22 சிறு நிலங்கள் உள்ளன. தியாம் சியூ அவென்யூ அமையும் அவற்றில் ஐந்து பங்களாக்கள், 10 'செமி-டிட்டேச்ட்' எனப்படும் இரட்டைத் தரை வீடுகள் உள்ளன.

