சிறார்களுக்கான தடுப்பூசி பரிசோதனை பதிவு நிறைவு; ஆய்வு விரைவில் தொடங்கும்
சிங்கப்பூரில் ஐந்து முதல் 11 வயது வரையுள்ள சிறார்களுக்கு வரும் ஜனவரியில் இருந்து கொவிட்-19 தடுப்பூசி போடப்படும் வாய்ப்பு இருப்பதாக மருத்துவச் சேவைகள் துறை இயக்குநர் கென்னத் மாக் நேற்று தெரிவித்தார்.
தேசிய தடுப்பூசித் திட்டத்தை இத்தகைய வயதுள்ள சிறார்களுக்கும் நீட்டித்து அதன் மூலம் தொற்றில் இருந்து அவர்களைக் காப்பது தொடர்பில் கொவிட்-19 தடுப்பூசி வல்லுநர் குழுவுடன் தொடர்ந்து தாங்கள் பணியாற்றி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இதன் தொடர்பில் தேவைப்படும் ஒழுங்குமுறை அங்கீகாரம் குறித்து ஃபைசர் நிறுவனத்துடன் சுகாதார அமைச்சு செயல்பட்டு வருவதாகவும் இணைப் பேராசிரியர் மாக் தெரிவித்தார்.
கொவிட்-19 அமைச்சுகள் நிலை பணிக்குழு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அவர், 12 வயதுக்குக் குறைந்த சிறார்களுக்குத் தொற்று ஏற்படும் ஒரு போக்கு தலைகாட்டி இருப்பதாகக் கூறினார். வெள்ளிக்கிழமை நிலவரப்படி கொரோனா தொற்று ஏற்பட்டவர்களில் சிறார்களின் விகிதம் 11.2% ஆக இருந்ததை அவர் சுட்டிக்காட்டினார்.
இதனிடையே, கொவிட்-19 தடுப்பூசி போடப்படும் சிறார்களின் உடலில் எத்தகைய விளைவுகள் ஏற்படும் என்பதைத் தீர்மானிப்பதற்காக நடத்தப்படும் ஒரு பரிசோதனைக்கான பதிவு நிறைவடைந்துவிட்டதாகவும் ஆய்வுகள் விரைவில் தொடங்கும் என்றும் கேகே மாதர், சிறார் மருத்துவமனை தெரிவித்தது.
அந்த ஆய்வில் ஐந்து முதல் 11 வயது வரையுள்ள 150 சிறார்களை உள்ளடக்குவது என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாகவும் அந்தச் சிறார்கள் ஏறத்தாழ 15 மாத காலம் கண்காணிக்கப்படுவார்கள் என்றும் அந்த மருத்துவமனையின் சிறார் மருத்துவத் துறையைச் சேர்ந்த தொற்றுநோய் சேவைப் பிரிவின் மூத்த ஆலோசகரான டாக்டர் யுங் சீ ஃபூ கூறினார். ஆய்வுக்கு சுகாதார அமைச்சு ஆதரவு அளிக்கிறது.
கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ளும் சிறார்களின் உடலில் பாதுகாப்பும் நோய் தடுப்பாற்றலும் எந்த அளவுக்கு ஏற்படும் என்பதை மதிப்பிடுவது ஆய்வின் நோக்கம்.
ஆய்வின் மூலம் தெரிய வருபவை, சிங்கப்பூரில் சிறார்களுக்கான பொதுச் சுகாதார தடுப்பூசி கொள்கைக்கான வழிகாட்டி நெறிமுறையாக இருக்கும் என்று டாக்டர் யுங் தெரிவித்தார்.