பூஸ்டர் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளத் தகுதி பெற்றவர்கள், இரண்டு தவணை தடுப்பூசியைப் போட்டதற்கு ஐந்து மாதங்களுக்குப் பிறகு அந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம் என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் அறிவித்துள்ளார்.
இதைக் கணக்கிட்டுப் பார்க்கையில், மக்கள்தொகையில் பாதிப்பேர் இந்த ஆண்டு முடிவில் பூஸ்டர் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டு இருப்பார்கள் என்பது சாத்தியம்.
கொவிட்-19 அமைச்சுகள் நிலை பணிக்குழுவின் இணைத் தலைவரான திரு ஓங், பூஸ்டர் தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதற்கான கால இடைவெளியை அனைத்து வயதுப் பிரிவினருக்கும் ஐந்து மாதமாக ஆக்கலாம் என்று கொவிட்-19 தடுப்பூசி வல்லுநர் குழு இப்போது பரிந்துரைத்து இருப்பதாகக் கூறினார்.
இந்த இடைவெளி, 30 முதல் 59 வயது வரையுள்ளோருக்கு இதுவரை ஆறு மாத காலமாக இருந்தது. 60 மற்றும் அதற்கும் அதிக வயதுள்ளவர்களுக்கு இது ஐந்து மாதமாக இருந்தது என்று திரு ஓங் நேற்று கொவிட்-19 பணிக்குழு செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
இந்தக் கால இடைவெளி மாற்றம் காரணமாக இப்போது முதல் வரும் டிசம்பர்வரை ஏறத்தாழ 1.5 மில்லியன் பூஸ்டர் தடுப்பூசியைப் போட்டுவிடலாம் என்று அவர் குறிப்பிட்டார்.
அதோடு, இந்த ஆண்டு முடிவில் மக்கள்தொகையில் பாதிப்பேர் பூஸ்டர் தடுப்பூசி காரணமாக உடலில் வலுவான நோய் எதிர்ப்பு ஆற்றலைப் பெற்று இருப்பார்கள் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார். டெல்டா கிருமி வீரியமிக்கதாக இருப்பதால் மூன்றாவது தடுப்பூசி கட்டாயம் என்று திரு ஓங் வலியுறுத்தினார்.
பூஸ்டர் தடுப்பூசிக்குத் தகுதி பெறுவோர்க்குக் குறுஞ்செய்தி மூலம் அழைப்பு விடுக்கப்படும். 30 வயது அதற்கும் அதிக வயது உள்ளவர்கள், கொவிட்-19 தொற்றக் கூடிய ஆபத்து அதிகம் உள்ள முன்களப் பணியாளர்கள் ஆகியோர் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்ள இப்போது தகுதி பெற்று உள்ளனர்.
தகுதி பெற்றிருப்போரில் யாருக்காவது குறுஞ்செய்தி வர வில்லை என்றால் அவர்கள் மொடர்னா தடுப்பூசி நிலையத்திற்கு நேரே சென்று பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். முன்பதிவு தேவையில்லை.