சிங்கப்பூர் சமூகம் கொவிட்-19க்கு எதிராக மேலும் மீள்திறனைப் பெற்று வருகிறது. நடமாட்டக் கட்டுப்பாடுகள் தளர்வதால் தொற்றுக் கூடவில்லை. மருத்துவ மனைகளிலும் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
தீவிர தடுப்பூசி இயக்கம் காரண மாக, தடுப்பூசி போட்டுக்கொள்ளாத முதியவர்கள் தொற்றுக்குப் பாதிக்கப்படுவதும் குறைந்துள்ள தாக சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்தார்.
கொவிட்-19 அமைச்சுகள் நிலை பணிக்குழு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அவர், சிங்கப்பூரின் சுகாதாரப் பராமரிப்பு முறையின்கீழ் சிகிச்சை பெறும் கொவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை அண்மைய வாரங்களில் குறைந்து உள்ளது என்றார். அக்டோபர் முழு வதும் இந்த எண்ணிக்கை ஏறத்தாழ 20,000 ஆக இருந்தது. அக்டோபர் 29ஆம் தேதி 26,386 ஆகக் கூடியது. ஆனால் அதற்குப் பிறகு நவம்பர் 7ல் 20,000 ஆகவும் இப்போது ஏறத்தாழ 15,000 ஆகவும் அது குறைந்து இருக்கிறது.
சிங்கப்பூர் முழுவதும் கடந்த சில வாரங்களில் மக்கள் நடமாட்டம் கூடினாலும் கொவிட்-19 தொற்று உள்ள ஒருவரிடம் இருந்து கிருமி பரவக்கூடிய சராசரி மக்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. கடுமையான நோய்ப் பாதிப்புகளும் குறைந்து வருகின்றன என்றாரவர்.