சிங்கப்பூர் கொவிட்-19 கட்டுப்பாடுகளை அடுத்த மாதம் மேலும் தளர்த்துவதற்கான வாய்ப்புகள் அநேகமாக இல்லை என்று நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் தெரிவித்து இருக்கிறார்.
எல்லாம் சரியாக நடந்தால் டிசம்பர் மாத முடிவில்தான் அடுத்த பரிசீலனை இடம்பெறும் என்று அவர் கூறினார்.
கொரோனா கிருமியைச் சமாளிப்பதற்கு அரசாங்கம் எடுக்கும் படிப்படியான அணுகுமுறையின் ஒரு பகுதியாக இது இடம்பெறுகிறது என்று நேற்று கொவிட்-19 அமைச்சுகள்நிலை பணிக்குழு செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.
வேலையிடக் கட்டுப்பாடுகள், கவர்ச்சி இடங்களுக்கான அனுமதி வரம்பு போன்ற இதர துறைகளில் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதற்கு கோரிக்கைகள் வந்துள்ளன.
இருந்தாலும் சிங்கப்பூர் இப்போதைக்கு ஒரு கட்டுப்பாட்டை மட்டும் தளர்த்துவதாகக் கூறினார்.
அடுத்த திங்கட்கிழமை முதல் ஐந்து பேர் வரை ஒன்றுகூடலாம் என்று நேற்று அறிவிக்கப்பட்டது.
இது தவிர மற்றவற்றை எல்லாம் இப்போதைக்கு தளர்த்தப்போவ தில்லை என்று திரு வோங் குறிப்பிட்டார்.
அடுத்த சில வாரங்களில் சூழ்நிலையைக் கண்காணித்து, ஒட்டு மொத்த சூழ்நிலை தொடர்ந்து சீராக இருந்தால் அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை அநேகமாக டிசம்பர் மாத முடிவில் பரிசீலிக்கலாம் என்று திரு வோங் கூறினார்.