தேவைக்கு ஏற்ப கட்டித்தரப்படும் வீடுகளின் எண்ணிக்கை கடந்தாண்டு 70 விழுக்காடு அதிகரித்தது. திருமணம், குடும்பம் அமைத்தல் ஆகியவை அதிகரித்து ஒரே வீட்டில் பல தலைமுறையினர் வாழும் வழக்கம் குறைந்துவர கடந்தாண்டில் மட்டும் 87,800 விண்ணப்பங்கள் செய்யப்பட்டுள்ளன. இதனுடன் ஒப்பிடும்போது 2019ல் 51,400 பிடிஓ விண்ணப்பங்களும் 2018ல் 38,500 விண்ணப்பங்களும் செய்யப்பட்டதாக வீடமைப்பு வளர்ச்சி கழகம் ஞாயிற்றுக்கிழமையன்று தெரிவித்தது.
ஆயினும், விற்பனைக்கு விடப்பட்ட பிடிஓ வீடுகளின் எண்ணிக்கை, தேவைக்கு ஈடாக உயரவில்லை. விற்பனைக்குத் தயாராக இருக்கும் வீடுகளின் எண்ணிக்கைக்கும் தேவைக்கும் இடையிலான இடைவெளி கடந்த மூன்று ஆண்டுகளாக அதிகரித்து வந்துள்ளது.
கடந்தாண்டு 16,800 பிடிஓ வீடுகள் விற்பனைக்கு விடப்பட்டன. 2016ஆம் ஆண்டில் 14,600 வீடுகளும் 2018ஆம் ஆண்டில் 15,800 வீடுகளும் விற்பனைக்கு விடப்பட்டன.
முதிர்ச்சி அடைந்துள்ள குடியிருப்புப் பகுதியிலும் அவ்வாறு அல்லாத குடியிருப்புப் பகுதிகளிலும் தேவை தொடர்ந்து வலுவாக இருப்பதாக வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் தெரிவித்தது.
கடந்தாண்டு திருமணம் செய்தவர்களின் எண்ணிக்கை 977,000க்கு அதிகம் என்று வீவக, 2020 மக்கள்தொகை கணக்கீட்டைக் குறிப்பிட்டது. 2010ல் திருமணம் செய்தவர்களின் மொத்த எண்ணிக்கை 880,000க்கும் அதிகம்.