சிங்கப்பூரை தூய்மை, பசுமைமிக்க நாடாக வைத்திருப்பதில் ஒவ்வொரு சிங்கப்பூரருக்கும் பொறுப்பு உள்ளது என்றும் அவர்கள் அந்தப் பொறுப்பை நிறைவேற்ற வேண்டும் என்றும் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் வலியுறுத்தி இருக்கிறார்.
சிங்கப்பூரில் முதலாவது மரம் நடும் நாள் இடம்பெற்று 50 ஆண்டுகள் ஆகின்றன. 50 ஆண்டுகளுக்கு முன் நடப்பட்ட தாவரங்கள் ஆழமாக வேரூன்றி அழகான மரங்களாக இன்று பரந்த பசுமையாகத் திகழ்கின்றன என்றார் அவர்.
அதேபோன்று தூய்மை, பசுமை இயக்கம் தொடர்ந்து வரும் ஆண்டுகளில் ஆழமடைய வேண்டும். அகலமடைய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
சிங்கப்பூரின் முதல் மரம் நடும் நாள் 1971ல் இடம்பெற்றது. நாட்டின் முன்னோடித் தலைவர்களில் ஒருவரான டாக்டர் கோ கெங் சுவீ மவுண்ட் ஃபேபரில் ஊசியிலைச் செடி ஒன்றை நட்டார்.
சிங்கப்பூரில் மரம் நடும் கலாசாரம் ஒரு தேசிய மரபாக செழித்து இருக்கிறது என்று அந்த இடத்தில் இருந்து நேற்று வெளியிடப்பட்ட ஒலிப்பதிவில் துணைப் பிரதமர் தெரிவித்தார்.
மரம் நடும் நாள் தூய்மை, பசுமை சிங்கப்பூர் இயக்கமாக விரிவடைந்து இருக்கிறது. அந்த இயக்கம் நேற்று தொடங்கப்பட்டது.
நாட்டை பசுமையாகவும் விரயங்களைக் குறைத்து தூய்மையாகவும் எப்படி வைத்துக்கொள்ளலாம் என்பது பற்றி திரு ஹெங் தனது உரையில் விளக்கினார்.
சிங்கப்பூரில் அடுத்த 10 ஆண்டுகளில் ஒரு மில்லியன் மரங்களை நடும் இயக்கம் தொடங்கி இருக்கிறது. மக்கள் அதில் கலந்துகொண்டு நாட்டை பசுமையாக வைத்திருக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.
தேசிய காய்கறித் தோட்ட இயக்கத்தில் அவர்கள் பங்கெடுக்கலாம் என்றார் அவர். தேவைப்படுவதை மட்டுமே சிங்கப்பூரர்கள் வாங்கவேண்டும். பல முறை பயன்படுத்தக்கூடிய பைகளையும் பாத்திரங்களையும் அவர்கள் பயன்படுத்த வேண்டும். இதன்மூலம் அவர்கள் குப்பைகளைக் குறைக்கலாம்.
குப்பைகளை அவற்றுக்கான தொட்டிகளில் போடும் பழக்கம் நிலைபெற வேண்டும் என்ற அவர், நிறுவனங்களும் இதில் பங்காற்ற முடியும் என்று கூறினார்.
நாட்டை தூய்மையாக வைத்திருக்க வேண்டியது முக்கியமானது என்றும் துப்புரவு, தூய்மை எந்த அளவுக்கு முக்கியம் என்பதை கொவிட்-19 நமக்கு போதித்து இருப்பதாகவும் திரு ஹெங் குறிப்பிட்டார். கம்போங் அட்மிரல்டியில் நடந்த தூய்மை, பசுமை சிங்கப்பூர் 2021 இயக்கம் தொடக்க நிகழ்ச்சியில் அடித்தள அமைப்புகளுக்கு 16 தேசிய விருதுகளைத் துணைப் பிரதமர் வழங்கினார். வடமேற்கு மாவட்ட மேயர் அலெக்ஸ் யாமுடன் சேர்ந்து அரிய மரக்கன்று ஒன்றை திரு ஹெங் நட்டார்.
தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ, நீடித்த, நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஏமி கோர் ஆகியோரும் செடிகளை நட்டனர்.
நேற்றைய நிகழ்ச்சியையொட்டி 'சிஜிஎஸ் அனுபவங்கள்' என்ற இணையக் கருத்தரங்குத் தொடர் ஒன்றும் தொடங்கப்பட்டது. அதில் பங்கெடுக்க அடுத்த ஆண்டு மார்ச் 31 வரை மக்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

