சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையில் தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான தரை வழி பயணத் திட்டம் நடப்புக்கு வரும்போது முதல் வாரத்தில் ஏறத்தாழ 1,440 பேர் எல்லை கடந்து செல்ல முடியுமென எதிர்பார்க்கப்படுகிறது.
தனிமை உத்தரவு இல்லாத அந்தச் சிறப்பு பயணத் திட்டம் தொடங்குவதை ஆவலுடன் எதிர்பார்த்து அதற்கு ஆயத்தமாக ஜோகூர் அரசாங்கம் இருக்கிறது என்று அம்மாநில முதல்வர் ஹஸ்னி முகம்மது தெரிவித்தார்.
அந்தப் பயணத் திட்டத்திற்கான ஆயத்தம், ஆற்றல் அளவு அடிப்படையில் முதல் வாரத்தில் 1,440 பேர் பயணம் மேற்கொள்ள இயலும் என்று எதிர்பார்ப்பதாக முதல்வர் கூறினார்.
பயணிகள் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தவேண்டி இருக்குமா அல்லது சொந்த வாகனங்களைப் பயன்படுத்தலாமா என்பது பற்றி இன்னமும் முடிவு செய்யவில்லை என்று தெரிவித்த முதல்வர், இந்த இரண்டில் எதற்கும் ஜோகூர் தயார் என்றார்.
சிங்கப்பூருக்கும் ஜோகூருக்கும் இடையில் தரை வழிப் பாதை திறப்பு எப்போது என்று சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும் கேட்டனர். அதற்குப் பதில் அளித்த முதல்வர் இந்த விவரங்களைத் தெரிவித்தார்.
சிங்கப்பூர்-ஜோகூர் எல்லை இம்மாதம் 29ஆம் தேதி திறக்கப்படும் என்று மலேசிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இருந்தாலும் இரு நாடுகளின் அரசாங்கங்களும் இதை இன்னமும் உறுதிப்படுத்தவில்லை. சிங்கப்பூர்- மலேசியா தரை வழிப் பாதையை இந்த மாத முடிவில் திறக்க இயலும் என சிங்கப்பூரின் அமைச்சுகள்நிலை கொவிட்-19 பணிக்குழு சனிக்கிழமை தெரிவித்தது.
தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகளுக்கான பயணத் திட்டம் தொடர்பில் இரு நாடுகளும் பேச்சு நடத்தி வருகின்றன என்றும் நீண்ட காலமாக பிரிந்து இருக்கும் குடும்பங்கள் பயணம் மேற்கொள்ள முன்னுரிமை கொடுக்கப்படும் என்றும் பணிக்குழு குறிப்பிட்டு உள்ளது.
கொவிட்-19 தலைகாட்டியது முதல் 100,000 பேருக்கும் மேற்பட்ட மலேசியர்கள் தங்கள் நாட்டுக்குச் செல்ல முடியாமல் சிங்கப்பூரில் முடங்கி இருப்பதாக மதிப்பிடப்படுகிறது. மலேசியா சென்று கூடிய விரைவில் தங்கள் குடும்பத்தாரைச் சந்திக்கலாம் என்று அவர்கள் மிகவும் நம்பிக்கையுடன் உள்ளனர்.