ப. பாலசுப்பிரமணியம்
நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டனின் தலைமைத்துவ பாணியைக் கடந்த சில ஆண்டு களாக கவனித்து வந்துள்ள நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழக மாணவர் வீ.தன்ராஜுக்கு, அது பற்றிய ஒரு கேள்வி மனத்தில் இருந்தது.
இக்கேள்வியை திருவாட்டி ஆர்டனிடமே நேரடியாகக் கேட்கும் அரிய வாய்ப்பு தன்ராஜுக்கு அண்மையில் கிடைத்தது.
இம்மாதம் நியூசிலாந்தில் மெய்நிகர் முறையில் நடந்த ஆசியப் பசிபிக் பொருளியல் (APEC) உச்சநிலை மாநாட்டை ஒட்டி, 'எதிர்காலக் குரல்கள்' (Voices of the Future) எனும் இரண்டு நாள் மாநாடு இம்மாதம் 9ஆம், 10ஆம் தேதிகளில் நடைபெற்றது.
அதில் 'ஏபெக்' பொருளியல் களைச் சேர்ந்த 124 இளையர்கள் கலந்துகொண்டனர். சிங்கப்பூரின் ஐந்து பேர் கொண்ட குழுவைப் பிரதிநிதித்து, இந்த இளையர் மாநாட்டில் பேச்சாளராகக் கலந்துகொண்டார் 24 வயது தன்ராஜ்.
பொதுக் கொள்கை, உலகளாவிய விவகாரங்கள் தொடர்பிலான பட்டப்படிப்பில் மூன்றாம் ஆண்டில் பயின்று வரும் இவர், தேசிய இளையர் மன்றம் வழி இந்த மாநாட்டைப் பற்றி தெரிந்துகொண்டார்.
ஆசியப் பசிபிக் வட்டாரத்தில், ஒரு பில்லியனுக்கும் மேற்பட்ட இளையர்கள் உள்ளனர். கொவிட்-19 கிருமிப் பரவல் இவர்களின் கல்வி, பயிற்சி, வேலை வாய்ப்புகளுக்கு பெரும் சவால்களையும் ஏற்படுத்தி உள்ளது.
கொவிட்-19 கிருமித்தொற்றைச் சமாளிப்பதற்கான பன்னாட்டு ஒத்துழைப்பு, மின்னிலக்க எதிர்காலம், பருவநிலை மாற்றம் மற்றும் நிலைத்தன்மை, அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருதல் போன்ற விவகாரங்களை இளையர்கள் மாநாட்டில் ஆராய்ந்தனர்.
குறிப்பாக சிங்கப்பூர் இளையர்கள் மின்னிலக்க எதிர்காலம் குறித்து பேசினர். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த பொருளாதாரம் தடையாகக்கூடாது என்றும் அதைப் பயன்படுத்துவதற்கான வசதிகளை அனைவருக்கும் ஏற்படுத்தித் தருவது முக்கியம் என்றும் குழுவினர் வலியுறுத்தினர்.
அதனுடன், அதிக தொழில்நுட்பப் பயன்பாட்டினால் சமூக உறவுகள் வலு இழந்துவிடும் அபாயத்தையும் அவர்கள் பகிர்ந்துகொண்டனர்.
பிரதமரிடம் முன்வைத்த கேள்வி
இம்மாநாட்டில் நியூசிலாந்து பிரதமரிடம் தமது கேள்வியை முன்வைத்தார் தன்ராஜ்.
மின்னிலக்கமயமாகி வரும் சூழலில் திருவாட்டி ஆர்டனால் எப்படி பரிவுமிக்க தலைமைத்துவத்தைக் கொள்கையாகக் கடைப்பிடிக்க முடிகிறது என்பதே அந்தக் கேள்வி.
அதற்கு விடை அளித்த அவர், இணையச் சூழலில் பொதுமக்களைப் பாதுகாக்க நியூசிலாந்து அரசாங்கம் எடுத்துக்கொள்ளும் முயற்சிகளை விவரித்தார்.
அத்தளங்களில் மக்களுடன் எப்போதும் தொடர்பில் இருப்பதன் முக்கியத்துவத்தையும் அவர் விளக்கினார்.
"நியூசிலாந்து பிரதமருடன் உரையாடியது பெருமைமிகு தருணம். அவர் மக்களுடன் தொடர்புகொள்ளும் நேரங்களில் அவரது பரிவுகாட்டும் குணம் வெளிப்படுகிறது. அரசாங்கக் கொள்கைளை வரையும்போது பரிவுமிக்க சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கமும் தெரிகிறது," என்று கூறினார் தன்ராஜ்.
நன்யாங் தொழில்நுட்பப் பல் கலைக்கழகத்தின் மாணவர் சங்கத்தின் தலைவராக, அமைச்சர்களுடனான கருத்தரங்குகளை ஏற்பாடு செய்த அனுபவம் தன்ராஜுக்கு உண்டு. ஓய்வு நேரங்களில் இவர் பூன் லே வட்டாரத்தில் அடித்தள அமைப்பு தொண்டூழியராக சேவையாற்றி வருகிறார்.
அனைவருக்கும் கல்வியிலும் வேலையிடத்திலும் சம வாய்ப்பு கள் கிடைக்கவேண்டும் என்பதில் உறுதிகொண்டுள்ளார் தன்ராஜ். எதிர்காலத்தில் மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் கொள்கை சார்ந்த பணியில் ஈடுபடவேண்டும் என்பது தன்ராஜின் விருப்பம்.