உட்லண்டஸ் பணிமனையில் இரண்டு பேருந்துகளைத் தாக்கி, $6,200 மதிப்பிற்குச் சேதம் விளைவித்த ஆடவர்க்கு இரு வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இக்குற்றத்தில் ஈடுபட்டபோது ஸு ஹோங்லு, 32, என்ற அந்தச் சீன நாட்டவர் மதுபோதையில் இருந்தார்.
கடந்த ஆண்டு நவம்பர் 22ஆம் தேதி இந்தக் குற்றச்செயலில் அவர் ஈடுபட்டார்.
அதற்கு முதல்நாள் மாலை 6 மணியளவில் தமது வீட்டில் ஸு ஆறு கலன் பியர் அருந்தினார். பின்னிரவு 1.30 மணியளவில் உட்லண்ட்ஸ் தொழிற்பூங்காவில் உள்ள பணிமனைக்கு வெளியே சாலை நடுவில் அவர் நின்றிந்தார்.
அப்போது ஒரு எஸ்எம்ஆர்டி திரும்பியதைக் கண்டதும் அதை நோக்கிக் கத்தியபடியே ஓடினார் ஸு.
ஓட்டுநர் பேருந்தை நிறுத்தியதும், முன்புறக் கண்ணாடித் துடைப்பானைப் பிடித்து இழுத்து, கண்ணாடியை உடைக்கப் பார்த்தார். பின்னர் பேருந்தின் கதவை அவர் திறக்க முயன்றதாகவும் அது முடியாமல் போனதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் அவ்விடத்தைவிட்டு அகன்ற ஸு, 20 நிமிடங்களுக்குப் பிறகு இன்னொரு பேருந்தைத் தாக்கினார். ஓட்டுநர் பக்கம் இருந்த பக்கக் கண்ணாடியைப் பிடித்து இழுத்துக் கழற்றியெடுத்த அவர், அதனைக் கொண்டு கண்ணாடியை உடைக்கப் பார்த்தார். அதனால், கண்ணாடியில் கீறல்கள் விழுந்தன.
ஸுவின் செயலால் முதல் பேருந்திற்கு எந்தச் சேதமும் ஏற்படவில்லை. அதனால், இரண்டாவது பேருந்தில் ஏற்பட்ட சேதத்தைச் சரிசெய்ய $6,200 செலவானது.
அத்தொகையை இவ்வாண்டு செப்டம்பர் 6ஆம் தேதி ஸு, எஸ்எம்ஆர்டிக்குக் கொடுத்துவிட்டார்.
ஸுவின் அடாவடித்தனத்திற்காக அவருக்கு ஈராண்டுகள்வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டிருக்க முடியும்.

