சிங்கப்பூரில் நூற்றுக்கணக்கில் ஆளெடுக்கும் அமெரிக்க நிறுவனம்

சிங்கப்பூரில் நூற்றுக்கணக்கில் ஆளெடுக்கும் அமெரிக்க நிறுவனம்

1 mins read
3db93ad2-e597-42dd-85aa-7e72a7fadd73
லோயாங்கில் அமைந்துள்ள 'ஜிஇ ஏவியேஷன்' இன்று திங்கட்கிழமை வருகை மேற்கொண்டார் வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங் (இடது). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கொவிட்-19 பரவல் ஏற்படுத்திய படுமோசமான தாக்கத்தில் இருந்து விமானத் துறை தொடர்ந்து மீண்டு வருகிறது.

இதன் எதிரொலியாக, விமான இயந்திரத் தயாரிப்பு நிறுவனமான 'ஜிஇ ஏவியேஷன்', அடுத்த ஆண்டில் 300க்கும் மேற்பட்ட ஊழியர்களை வேலைக்கு எடுக்கவிருப்பதாக அறிவித்துள்ளது.

அந்த அமெரிக்க நிறுவனம், கடந்த ஆண்டில் தனது ஊழியரணியில் 600 பேரைக் குறைத்தது. சிலர் ஆட்குறைப்பு செய்யப்பட, வேறு சிலர் வேறு நிறுவனங்களில் தற்காலிகமாகப் பணியமர்த்தப்பட்டனர்.

ஆனாலும், இவ்வாண்டிலேயே அந்நிறுவனம் ஆட்சேர்ப்பைத் தொடங்கிவிட்டது. இவ்வாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 260 பேரை வேலைக்கு எடுத்த அந்நிறுவனம், ஆண்டிறுதிக்குள் மேலும் 250 பேர் தனது ஊழியரணியில் சேர்வர் என எதிர்பார்க்கிறது.

அடுத்த ஆண்டு நடுப்பகுதிக்குள் பணியாளர்களின் எண்ணிக்கை, கொவிட்-19 பரவலுக்கு முன்பிருந்த நிலையை எட்டும் என்றும் 'ஜிஇ ஏவியேஷன் சிங்கப்பூர்' நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் இயன் ரோஜர்ஸ் கூறினார்.

இப்போது அந்நிறுவனத்தில் 1,700க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்கின்றனர். அவர்களில் 80 விழுக்காட்டினர் உள்ளூர்வாசிகள்.

இந்நிலையில், இன்னும் பல உள்ளூர்ப் பொறியாளர்களையும் தொழில்நுட்பர்களையும் வேலையில் அமர்த்துவதற்கான நடவடிக்கைகளை 'ஜிஇ ஏவியேஷன்' நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

அடுத்த ஈராண்டுகளில் விமானத் துறை நிறுவனங்கள் கிட்டத்தட்ட 1,000 பேரை வேலைக்கு எடுக்கும் என்று மனிதவள அமைச்சர் டான் சீ லெங் சென்ற மாதம் தெரிவித்திருந்தார்.