பாலியல் சேவை வழங்கும் பெண்போல் தன்னைக் காட்டிக்கொண்டு, பலரை ஏமாற்றி பணம் பறித்த குற்றத்தைப் பதின்ம வயது இளையர் ஒருவர் ஒப்புக்கொண்டார்.
பொது இடத்தில் சண்டையிட்டதற்காக நன்னடத்தைக் கண்காணிப்பின்கீழ் இருந்தபோது அவர் இக்குற்றத்தைப் புரிந்தார்.
இந்தப் பாலியல் மோசடியில் தான் மாட்டிக்கொள்ளாமல் இருப்பதற்காக, தன் நண்பனின் வங்கிக் கணக்கு வழியாக அவர் பணத்தைப் பெற்றார்.
தன்மீதான ஏமாற்றுக் குற்றச்சாட்டையும் குற்றவியல் நடத்தை மூலம் பணம் பெற்ற இன்னொரு குற்றச்சாட்டையும் அந்த 19 வயது இளையர் நீதிமன்றத்தில் இன்று திங்கட்கிழமை ஒப்புக்கொண்டார்.
இந்தக் குற்றங்களைப் புரிந்தபோது அவருக்கு 17 வயது நிறைவடையவில்லை என்பதால் சட்டப்படி அவரது பெயரை வெளியிட இயலாது.
'கிளாடியா' என்ற பெயரில் 'டெலிகிராம்' வழியாக அவர் வாடிக்கையாளர்களை ஈர்த்ததாகக் கூறப்பட்டது.
'பாலியல் சேவைக்கு' $100 முதல் $200 தரும்படி, தம்மிடம் ஏமாந்தவர்களிடம் அவர் கூறியுள்ளார். அப்படி அவர்களிடம் இருந்து பணத்தைப் பெற்றதும், அவர்களுடனான உரையாடலை அழித்துவிட்டு, அவர்கள் தம்மை மேலும் தொடர்புகொள்ள முடியாதபடி தடைபோட்டு (block) விடுவார்.
அந்த இளையரிடம் பாலியல் சேவையைப் பெற $300 தருவதற்கு இணங்கிய ஒருவர், முன்பணமாக $150 தந்துள்ளார். அதன்பின் தொடர்புகொள்ள முடியாமல் போகவே, தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், 2020 ஏப்ரல் 23ஆம் தேதியன்று காவல்துறையிடம் புகார் அளித்தார்.
2020 பிப்ரவரி, மார்ச் மாதங்களில் இப்படிப் பலரை ஏமாற்றி, மொத்தம் $1,670 பெற்றார் அந்த இளையர். தமக்குத் துணைபோன நண்பனுக்குத் தரகுப்பணமாக அவர் $170 கொடுத்தார்.
இம்மாதம் 18ஆம் தேதிவரை, ஏமாற்றிப் பெற்ற பணத்தில் 250 வெள்ளியை அவர் திருப்பிக் கொடுத்துவிட்டார்.
அவருக்கான தண்டனை விவரம் அடுத்த ஆண்டு ஜனவரி 3ஆம் தேதி அறிவிக்கப்படும்.