நீண்ட நாட்களுக்குப் பிறகு குடும்பமாக உணவகத்துக்குச் சென்று உண்ண முடிந்தது பலருக்கு மகிழ்ச்சியைத் தந்தது.
நேற்று ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள காயத்திரி உணவகத்திற்கு மதிய உணவு உண்ண தமது குடும்பத்தாருடன் வந்திருந்தார் பொறியாளரான நித்யா சரவணன், 39. தமது கணவர், பெற்றோர், பிள்ளைகளுடன் அவர் வந்திருந்தார்.
"எங்கள் குடும்பத்தில் ஆறு பேர் என்பதால் இரு மேசைகளில் அமர்ந்து உண்ணவேண்டும். இருப்பினும் பல நாள் கழித்து குடும்பத்துடன் ஒன்றாக வெளியே கடை களுக்கு வருவது மனநிறைவைத் தந்தது," என்றார் திருமதி நித்யா.
முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டோர் நேற்று முதல் அதிகபட்சம் ஐவர் கொண்ட குழுக் களாக உணவகங்களில் அமர்ந்து உணவருந்தலாம் என்று சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது.
அவர்கள் ஒரே குடும்பத்தினராக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. மேலும், நேற்று முதல் ஐவர் வரை ஒன்றுகூடவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
லிட்டில் இந்தியா வட்டாரத்தில் உள்ள உணவக உரிமையாளர்கள் பலர் மக்கள் அதிக எண்ணிக்கையில் நண்பர்களுடனும் குடும்பத்துடனும் வருவார்கள் என்று எதிர்பார்ப்பதாகக் கூறினர்.
காயத்திரி உணவகத்தின் உரிமையாளர் திரு மகேந்திரன், 32, கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட போதும் உடனடியாக மாற்றம் தெரியாது என்றார். நிலைமை மேம்பட இன்னும் பல காலம் ஆகும் என்றார்.
லிஷா எனும் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கத்தின் செயலாளர் திரு ருத்திராபதி கட்டுப்பாட்டுத் தளர்வுகளை வரவேற்றார்.
இனி திருமண நிகழ்வுகளும் வெளி நிகழ்ச்சிகளுக்கான 'கேட்டரிங்' உணவு விநியோகமும் அதிகரிக்கும் என தாம் எதிர்ப்பார்ப்பதாக அவர் கூறினார். எப்படியும் வர்த்தகங்கள் வழக்கநிலையை அடைய குறைந்தது 6-12 மாதங்கள் எடுக்கும் என்றும் அவர் கருதுகிறார்.
"தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான பயணத் தடத் திட்டம் பல நாடுகளுக்கு விரிவாக்கப்பட்டாலும் வெளிநாட்டுச் சுற்றுப் பயணிகளின் எண்ணிக்கை அவ்வளவு விரைவில் அதிகரிக்காது," என்றும் திரு ருத்திராபதி குறிப்பிட்டார்.
கொவிட்-19 தொற்று அதிகரிப்பால் அண்மை கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால் உணவகங்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாயின.
ஏற்கெனவே ஒரு முறை இருவர் மட்டுமே அமர்ந்து உண்ண முடியும் என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. பின்னர் இம்மாதம் 10ம் தேதி முதல் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உணவகத்தில் உண்ணலாம் என்று அறிவிக்கப்பட்டது. நேற்று கட்டுப்பாடு கள் மேலும் தளர்த்தப்பட்டன.
தேக்கா நிலையத்தில் இன்னும்
அனுமதி இல்லை
இதற்கிடையே தேக்கா நிலையத்தில் உள்ள உணவங்காடியில் இன்னும் ஐவர் அமர்ந்து உண்ண அனுமதி இல்லை.
உணவங்காடி நிலையங்களிலும் காப்பிக் கடைகளிலும் இந்தத் தளர்வுகள் இன்று முதல் நடப்புக்கு வந்தாலும் அனைத்து உணவங்காடிகளுக்கும் கட்டுப்பாடுகள் உடனடியாக தளர்த்தப்படவில்லை.
இம்மாத இறுதிவாக்கில் தேக்கா உணவங்காடியில் ஐவர் அமர்ந்து உண்ண வகை செய்யப்படும் என்று அந்த உணவங்காடி நிலையத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் திரு ஆனந்தராஜ் சொன்னார். இவர் தேக்கா உணவங்காடியில் உள்ள 'ஸ்கைலேப் குக்ட் ஃபுட்ஸ்' கடையின் உரிமையாளர்.
தேக்கா உணவங்காடி போன்ற பெரிய உணவங்காடிகளுக்கு கண்காணிப்பு முன்னெச்சரிக்கை வழிமுறைகளை நடப்புக்குக் கொண்டு வர இன்னும் சில வாரங்கள் தேவைப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
ஹாஜா ஜய்னுப் கடையின் நிர்வாகி திரு ரஹ்மான் அலி, மீண்டும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை அடுத்து தேக்கா உணவங்காடிக்கு மக்கள் கூட்டம் மீண்டும் திரும்பும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறார். எனினும் இதுவரை வியாபாரம் மிகவும் மந்தமாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
வெளிநாட்டு ஊழியர்களும் பொதுமக்களும் வார இறுதிகளில் அதிகமாக வருவார்கள் என்று சமாட் தேக்கா தம் பிரியாணி கடையின் உரிமையாளர் திரு தெமாமுல் அன்சாரி சுட்டிக்காட்டினர்.
அதனால் புதிய தளர்வுகளால் வாரயிறுதியில் கூட்டம் அதிகரிக்கும் என நம்பிக்கையுடன் இருப்பதாக திரு தெமாமுல் கூறினார்.
முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள், 5 பேர் கொண்ட குழுக்களாக 11 உணவங்காடி நிலையங்களிலும் 7 காப்பிக் கடைகளிலும் மட்டுமே அமர்ந்து உணவு உட்கொள்ளலாம். தேசிய சுற்றுப்புற அமைப்பும், சிங்கப்பூர் உணவு அமைப்பும் இதைத் தெரிவித்தன.
கூடுதல் செய்தி: சக்தி மேகனா

