கொவிட்-19 நோய்ப் பரவல் நீடித்து வரும் நிலையில், சிங்கப்பூரில் உள்ள சில பாலர்பள்ளிகள் வசதி குறைந்த குடும்பங்களுக்கு உதவி வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, குழந்தைப் பராமரிப்பு நிலையங்கள் நடத்தி வரும் 'என்டியுசி ஃபர்ஸ்ட் கேம்பஸ்' (என்எஃப்சி) அடுத்த ஆண்டு முதல் வசதி குறைந்த குடும்பங்களுக்கான மனநலத் திட்டத்தைத் தொடங்கும்.
திட்டத்தின்கீழ், பெற்றோருக்கு மனநல ஆலோசனை வழங்கப்படும்.
மேலும் சுகாதாரம், சத்துணவு, மனநலம், வளர்ச்சித் தேவைகள் உள்ள பிள்ளைகளுக்கு உதவுவது போன்ற அம்சங்களில் பெற்றோருக்குப் பயிலரங்குகளையும் நிறுவனம் நடத்தும். என்எஃப்சியின் தலைமை குழந்தை ஆதரவு அதிகாரி லூயிசா சிங் இதைத் தெரிவித்தார்,
வீட்டில் பிள்ளைகளின் கற்றலுக்கு உதவ பெற்றோருக்கு உதவும் காணொளிகள், மின்னியல் வளங்கள் போன்றவற்றை ஆசிரியர்கள் தேர்ந்தெடுப்பார்கள்.
ஏற்கெனவே என்எஃப்சி, தனது 'பிரைட் ஹொரைஸன்ஸ்' உதவி நிதியின் கீழ், வசதி குறைந்த குடும்பங்களுக்கு உதவ $2.4 மில்லியனைச் செலவிட்டுள்ளது.
கடந்த ஈராண்டுகளாக குடும்ப வருவாய், பிள்ளைகளின் கற்றல் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள சவால் களைச் சமாளிக்க இது உதவும்.
உதாரணத்துக்கு, என்டியுசி நடத்தும் பாலர் பள்ளிகளில் பயிலும் சுமார் 4,200 மாணவர்களின் குழந்தை வளர்ச்சிக் கணக்கில் ஒரே முறையாக தலா $400ஐ அது செலுத்தியுள்ளது.
மேலும், வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த பாலர்கள் பள்ளிக்கு வருவது சற்று குறைந்துள்ளதை என்எஃப்சி கவனித்துள்ளதாக திருவாட்டி சிங் கூறினார்.
சென்ற ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் அத்தகைய பாலர்களில் முறையே 63 விழுக்காட்டினரும் 51 விழுக்காட்டினரும் பள்ளிக்குச் சென்றனர்.
ஒப்புநோக்க, சென்ற ஜனவரியில் வசதி குறைந்த குடும்பங் களைச் சேர்ந்த பாலர்களில் 81 விழுக்காட்டினரும் ஏப்ரலில் 74 விழுக்காட்டினரும் பள்ளிக்கு வந்தனர்.
இவ்வேளையில் 'ஈட்டன்ஹவுஸ்' சமூக நிதி, வசதி குறைந்த பாலர் களுக்கு கதைப் புத்தகங்கள் மீது ஆர்வத்தை ஏற்படுத்தும் திட்டத்துக்காக தொண்டூழியர்களைத் திரட்டி வருகிறது.
'டீச்சர்ஸ்எவ்ரிவேர்' எனும் அத்திட்டத்தில் இதுவரை 60 பேர் சேர்ந்துள்ளனர்.
பெற்றோருடன் இணைந்து பிள்ளைகளுக்கு வாசிப்பில் நல்ல அடித்தளத்தை அமைத்துத் தருவது திட்டத்தின் நோக்கம் என்று அந்த சமூகநிதியின் இயக்குநர் லின் பெய்மின் கூறினார். ஈட்டன்ஹவுஸ் பாலர்பள்ளி குழுமம் அமைப்பை நடத்துகிறது.