சிங்கப்பூரில் கடந்த சில மாதங்களில் கொவிட்-19 கிருமித்தொற்று ஏறி இறங்கி வரும் நிலையில், சில பெற்றோர் தங்கள் பிள்ளைகளை பாலர் பள்ளிக்கு அனுப்புவதைத் தவிர்த்துள்ளனர்.
ஆனால் பாலர் பள்ளிகளுக்குச் சென்றுவரும் பிள்ளைகளின் எண்ணிக்கை நிலையாகவே உள்ளது என்றும் பெரிய அளவில் குறைய வில்லை என்றும் இங்குள்ள பாலர்பள்ளி நடத்துநர்கள் கூறியுள்ளனர்.
பெற்றோர் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பும் நேரம் குறைந்துள் ளதாகச் சில பாலர் பள்ளிகள் கூறின. சில பெற்றோர் தங்கள் பிள்ளைகளை சீக்கிரமாக வீட்டிற்கு அழைத்துச் செல்கின்றனர். அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாள் பிள்ளைகளை அனுப்புகின்றனர் என்றார் 'பிஸிபீஸ்ஏஷியாவின்' மூத்த இயக்குநர் ரானல்ட் குவோங்.
சில நாட்களில் பிள்ளைகளுக்கு உடல்நலம் சரியில்லாமல் இருக்கக்கூடும். முன்னெச்சரிக்கையாக பெற்றோர் அவர்களைப் பள்ளி அனுப்ப மாட்டார்கள் என்று 'ஈட்டன்ஹவுஸ்' பாலர்பள்ளிக் குழுமத்தின் குழு விளம்பர மற்றும் சந்தைப்படுத்துதல் பிரிவின் இயக்குநர் பிப்பாஷா மினோச்சா கூறினார்.
ஏற்கெனவே மருத்துவப் பிரச்சினைகள் அல்லது குறைவான எதிர்ப்பாற்றல் உள்ள பிள்ளைகளை அவர்களின் பெற்றோர் பள்ளிக்கு அனுப்புவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
எனினும், பள்ளியில் உள்ள சமூகச் சூழல், பிள்ளைகளுடன் பழகும் வாய்ப்பு, சீரான நடவடிக்கைகள் போன்றவை தங்கள் பிள்ளை களுக்குக் கிடைக்க வேண்டும் என்று விரும்புவதாக திருவாட்டி பிப்பாஷா சொன்னார்.
அதனால் அவர்கள் பெரும்பாலும் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பவே செய்கின்றனர் என்று அவர் குறிப்பிட்டார்.