செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
5c94c634-72f8-45da-a5b4-e43d5fa7e800
-

பார்வையாளர் நேரத்தில் சிறுவர்களை அனுமதிக்காத மருத்துவமனைகள்

சிங்கப்பூரில் உள்ள பல மருத்துவமனைகள் 12 வயதுக்கும் கீழுள்ள சிறுவர்கள் அங்குள்ள நோயாளிகளைச் சென்றுபார்ப்பதை அனுமதிக்க மறுத்துள்ளன அல்லது சிறுவர்கள் வரவேண்டாம் என்று வலியுறுத்தி வருகின்றன.

இங்குள்ள 21 மருத்துவமனைகளிடம் புதிய விதிமுறைகள் பற்றி கேட்டறிந்த ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், பத்து மருத்துவமனைகள் 12 வயதுக்கும் கீழுள்ள சிறுவர்கள் நோயாளிகளைச் சென்று பார்க்க அனுமதி மறுத்துள்ளதாகக் கூறியது. இவற்றில் சிங்கப்பூர் பொது மருத்துவமனை, செங்காங் சமூக மருத்துவமனை, கேகே மகளிர் சிறார் மருத்துவமனை, ஃபேரர் பார்க் மருத்துவமனை உள்ளிட்டவை அடங்கும்.

மவுண்ட் அல்வெர்னியா போன்றவை, சிறுவர்கள் தங்கள் நோயாளிகளை வந்துபார்ப்பதைத் தவிர்க்கும்படி கூறின.

புதிய தளர்வுகளின்கீழ், தடுப்பூசி போட்டுக்கொண்டோர் மருத்துவமனையில் உள்ள நோயாளிகளைச் சென்று பார்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், 12 வயதுக்கும் கீழுள்ள சிறுவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள இன்னும் தகுதி பெறவில்லை.

பல உறுப்பு அழற்சிநிலை ஏற்பட்ட சிறுவன் உடல்நிலை தேறினான்

கொவிட்-19 கிருமி தொற்றிய சிறுவர்களுக்கு ஏற்படக்கூடிய பல உறுப்பு அழற்சிநிலையால் பாதிக்கப் பட்ட நான்கு வயது சிறுவன் கடந்த 17ஆம் தேதி புதன்கிழமை மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினான்.

முகமது அலி ஸஃபிர் முகமது அஸ்மி (படம்) தனது நலத்தை நாடியோ ருக்கு நன்றிகூறிய காணொளியை அவனது தாயாரும் சித்தியும் தங்கள் ஃபேஸ்புக் பக்கங்களில் பதிவிட்டனர்.

அதில் உற்சாகமாகக் காணப்பட்ட அலி ஸஃபிர், தனக்காக வேண்டிக்கொண்ட அனைவருக்கும் நன்றி கூறிவிட்டு மகிழ்ச்சியுடன் சிரித்து விரல்களைச் சேர்த்து இதயத்தைக் காட்டினான்.

அலி ஸஃபிர் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டாலும் அவன் இரண்டு வேளைகளில் மருந்துகளை உண்பதுடன் மருந்து ஊசியையும் செலுத்தவேண்டும் என்று அவர் தாயார் மெரிலின் காக்கானிடின் கூறினார். அந்த நான்கு வயது சிறுவன் இம்மாதம் முதல் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். உடலில் பல உறுப்புகளைத் தாக்கி செயலிழக்கச் செய்யும் அரிய, கடுமையான அழற்சிநிலைக்கு அவன் ஆளானான்.

இரு மாதங்களில் குறைவான தொற்று

சிங்கப்பூரில் நேற்று முன்தினம் 21ஆம் தேதி புதிதாக 1,670 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

கடந்த செப்டம்பர் 27ஆம் தேதிக்குப் பிறகு ஒருநாளில் பதிவான ஆகக் குறைவான பாதிப்பு இது. செப்டம்பர் 27 அன்று 1,647 பேர்க்கு கொரோனா பாதிப்பு பதிவானது.

வாராந்திர கொவிட்-19 தொற்று உயர்வு விகிதம் கடந்த சனிக்கிழமை 0.78ஆக இருந்த நிலையில், நேற்று முன்தினம் அது 0.81 எனச் சற்றே கூடியது. தொடர்ந்து ஒன்பது நாள்களாக இவ்விகிதம் ஒன்றுக்குக்கீழ் இருந்து வருகிறது.

இதனிடையே, நேற்று முன்தின நிலவரப்படி கொவிட்-19 தொற்றால் உடல்நிலை மோசமாகி, 63 முதல் 95 வயதிற்குட்பட்ட மேலும் எட்டுப் பேர் இறந்துவிட்டனர். இதனையடுத்து, கொரோனாவால் மாண்டோர் எண்ணிக்கை 662ஆக உயர்ந்தது.