சிங்கப்பூரை மீண்டும் ரசிப்பதற்காக வழங்கப்பட்ட நூறு வெள்ளி பெருமானமுள்ள 'சிங்கப்பூர் ரீடிஸ்கவர்ஸ்' பற்றுச்சீட்டை இன்னமும் பயன்படுத்தாதவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாண்டு டிசம்பரில் காலா வதியாக வேண்டிய அந்தப் பற்றுச் சீட்டுகள் அடுத்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்வது அவசியம்.
சிங்கப்பூரர்கள் பற்றுச்சீட்டு மூலம் பலன் அடைவதை உறுதி செய்வதற்காக அவகாசம் நீட்டிக்கப்பட்டதாக சிங்கப்பூர் பயணத் துறைக் கழகம் நேற்று தெரிவித்தது.
உள்ளூர் சுற்றுலாத் தளங்களை சுற்றிப்பார்க்கவும் ஹோட்டலில் தங்கவும் பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு சிங்கப்பூ ரருக்கும் நூறு வெள்ளி மதிப்புள்ள சிங்கப்பூரை மீண்டும் ரசிப்பதற்கான பற்றுச்சீட்டு வழங்கப்பட்டது.
இதனை பத்து, பத்து வெள்ளியாக வெவ்வேறு இடங்களில் பயன்படுத்த முடியும்.
"கொவிட்-19 காரணமாக ஒன்றுகூடுவதற்கும் சுற்றுலாத் தளங்களில் வாடிக்கையாளர் எண்ணிக்கைக்கு வரம்பு விதிக்கப்பட்டதாலும் பற்றுச்சீட்டை சிலரால் பயன்படுத்த முடியவில்லை என்பதை எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது," என்று கழகம் அறிக்கையில் குறிப்பிட்டது.
சிங்கப்பூரை மீண்டும் ரசிப்பதற்கான பற்றுச்சீட்டு முதலில் கடந்த ஜூன் மாதம் காலாவதியாகவிருந்தது.
ஆனால் ஏப்ரல் மாதம் பற்றுச்சீட்டை இவ்வாண்டு டிசம்பர் வரை பயன்படுத்தலாம் என்று கழகம் தெரிவித்தது. அப்போதும் சில சிங்கப்பூரர்கள் இன்னமும் பற்றுச்சீட்டை பயன்படுத்தாமல் இருக்கின்றனர். இந்த நிலையில் மீண்டும் மார்ச் 31ஆம் தேதி வரை பற்றுச்சீட்டை பயன்படுத்த கழகம் அனுமதி வழங்கியுள்ளது.
நவம்பர் 1ஆம் தேதி வரை ஏறக்குறைய 1.3 மில்லியன் சிங்கப் பூரர்கள் ஒருமுறையாவது பற்றுச்சீட்டை பயன்படுத்தியுள்ளனர். இதன் மூலம் 1.6 மில்லியன் பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன. இன்னமும் 1.66 மில்லியன் சிங்கப்பூரர்கள் பற்றுச்சீட்டை பயன்படுத்தாமல் இருக்கின்றனர்.
கொள்ளைநோய் பரவல் காரணமாக உள்ளூர் பயணத்துறை வெகுவாகப் பாதிக்கப்பட்டதால் 320 மில்லியன் வெள்ளி மதிப்புள்ள 'சிங்கப்பூர் ரீடிஸ்கவர்ஸ்' உள்ளிட்ட பிரசாரம் கடந்த ஆண்டு ஜூலையில் தொடங்கப்பட்டது.
டிசம்பர் 31ஆம் தேதிக்குள் 'சிங்கப்பூர் ரீடிஸ்கவர்ஸ்' முகப்புகளில் பற்றுச்சீட்டை பயன்படுத்தி உள்ளூர் சுற்றுலாத் தளங்களுக்குச் செல்லவும் ஹோட்டல்களில் தங்கவும் முன்பதிவு செய்யலாம்.
சமூக நிலையங்கள், சமூக மன்றங்கள் உட்பட 66 இடங்களில் இதற்கான முகப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
'Changi Recommends', 'GlobalTix', 'Traveloka', 'Trip.com' and 'Klook' ஆகிய இணையத் தளங்களிலும் பற்றுச்சீட்ைட பயன் படுத்தி முன்பதிவு செய்யலாம்.