மலேசிய கடற்படைத் தளபதி அட்மிரல் முஹமட் ரேஸா முஹமட் சானி சிங்கப்பூருக்கு வருகையளித்துள்ளார்.
மூன்று நாள் அறிமுகப் பயணம் மேற்கொண்டு இங்கு வந்துள்ள அவர், நேற்று தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென்னைச் சந்தித்துப் பேசினார்.
தற்காப்புப் படை தலைவர் லெப்டினெண்ட் ஜெனரல் மெல்விங் ஓங், கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் ஆரோன் பெங் ஆகியோரையும் அவர் சந்தித்தார்.
இன்று அவரது சிங்கப்பூர் பயணம் நிறைவுபெறுகிறது.
அட்மிரல் முஹமட் ரேஸா தமது பயணத்தின் ஒரு பகுதியாக துவாஸ் கடற்படைத் தளத்தை சுற்றிப் பார்த்தார். அங்கு பல்வேறு வகையான பாவனைப் பயிற்சி சாதனங்களை அவர் பார்வையிட்டார்.
அவரது பயணம் பற்றி கருத்துரைத்த சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சு, சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையேயுள்ள நீண்டகால தற்காப்பு உறவை அட்மிரல் முஹமட் ரேஸாவின் பயணம் பிரதி பலிப்பதாக தெரிவித்தது.
ஐந்து நாடுகள் தற்காப்பு ஏற்பாடு, ஆசியான் தற்காப்பு அமைச்சர்கள் மாநாடு, ஏடிஎம்எம்-பிளஸ் ஆண்டுக்கூட்டம் உட்பட இருதரப்பு பயிற்சி, இருதரப்பு வருகை, நிபுணத்துவ பரிமாற்றம் மூலம் சிங்கப்பூர்-மலேசிய கடற்படை தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் அமைச்சின் அறிக்கை குறிப்பிட்டது. ஏடிஎம்எம்-பிளஸ் எனும் ஆண்டுக் கூட்டத்தில் ஆசியான் அமைச்சர்களும் ஆஸ்திரேலியா, இந்தியா, சீனா, ஜப்பான், நியூசிலாந்து, கொரியா, ரஷ்யா, அமெரிக்கா ஆகிய எட்டு பங்காளி நாடுகளும் பங்கேற்று வருகின்றன.