கார் ஓட்டுநர் ஒருவர் திடீரென 'பிரேக்' போட்டு வாகனத்தை நிறுத்தியதால் அதன் மீது மோதுவதைத் தவிர்க்க பொதுப் பேருந்து ஓட்டுநர் சடாரென தனது வாகனத்தை நிறுத்தினார்.
இதனால் பேருந்தில் பயணம் செய்த பெண் பயணி ஒருவர் தடுமாறி கிழே விழுந்து காயம் அடைந்தார். எஸ்பிஎஸ் பேருந்தில் நின்றுகொண்டு பயணம் செய்த 60 வயது அந்தப் பயணிக்கு விலா எலும்பு முறிவும் முதுகுத் தண்டில் காயமும் ஏற்பட்டது. கார் ஓட்டுநரான 65 வயது டாங் டோ பியோவ் கவனக் குறைவாகச் செயல்பட்டு பயணிக்கு காயம் விளைவித்த குற்றத்தை நேற்று நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். அவருக்கு 2,500 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது. பேருந்து ஓட்டுநர் ஓங் சுவான் ஹாய்க்கு, 64, இதே குற்றச் சாட்டுக்காக கடந்த மாதம் 1,500 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது. இரு சிங்கப்பூரர்களும் இரண்டு மாதங்களுக்கு எல்லாவித வாகனங்கள் ஓட்ட தடை விதிக்கப் பட்டுள்ளது. இந்தச் சம்பவம் 2019 மே 30ஆம் தேதி மாலை 5.30 மணி அளவில் தெம்பனிஸ் அவென்யூ 7 அருகே நிகழ்ந்தது.

