சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் நடத்திய கம்பன் விழாவில் இளையர்கள் ஆதிக்கம் செலுத்தும் நிகழ்ச்சியாக அமைந்துள்ளது என்று அவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட இந்து அறக்கட்டளை வாரியத் துணைத் தலைவர் திரு. இரா. தினகரன் கூறியிருக்கிறார்.
கடந்த சனிக்கிழமை குவியம் வழியாக நடைபெற்ற அவ்விழாவில் நிகழ்ச்சி நெறியாளர்கள், பேச்சாளர்கள் அனைவரும் இளையர்களாக இருந்தனர். மாணவி ஒருவர் 'திரைப்பாடல்களில் கம்பனின் கவிதைகள்' என்னும் தலைப்பில் பேசினார். கம்பன் கவிதைகளில் நடத்தப்பெற்ற போட்டிகளில் நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றதாகத் தெரிவித்தார்கள். இத்தகைய முயற்சிகள் மூலம் கம்பன் சொல்லும் விழுமியங்கள் இளையர்களைச் சென்று சேரும் வாய்ப்பு அதிகமுள்ளது என்று திரு தினகரன் தெரிவித்தார்.
அரசாங்கம் நடத்தும் எழுத்தாளர் விழாவில் தமிழ் நிகழ்ச்சிகளில் அதிகமானோர் பங்கேற்பதில்லை என்றும் இது வருந்தத்தக்கது என்றும் எழுத்தாளர் கழகத் தலைவர் திரு. நா. ஆண்டியப்பன் தமது தலைமையுரையில் பேசியதைச் சுட்டிய திரு. தினகரன் அத்தகைய தமிழ் நிகழ்ச்சிகளில் தமிழர்கள் அதிகம் பங்கேற்க வேண்டும் என்றும் அதற்குத் தமிழ் அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இருவர் என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றிய இளம் வழக்குரைஞர் செல்வி கோ.சு. சிம்ஹாஞ்சனா, இரணியன் மகன் பிரகலாதனையும் வாலியின் மகன் அங்கதனையும் ஒப்பிட்டுப் பேசினார். இருவரும் இளம் வயதிலேயே 'நான்' என்ற அகந்தையில்லாமல் ஆத்மஞானம் பெற்றவர்கள் என்றார் அவர்.
சொல் நூற்கலுற்றேன் என்னும் கம்பனின் வரியைத் தலைப்பாக எடுத்துக்கொண்டு பேசிய இளைஞர் திரு. த. திருமாறன் இராமனையும் இராவணனையும் ஒப்பிட்டுப் பேசினார். இருவரும் தவறுகளும் செய்திருக்கிறார்கள், நன்மைகளும் செய்திருக்கிறார்கள், ஆனால் இராமன் தனது தவறுகளுக்கு வருந்துகிறான், அதனால் அவன் உயர்ந்து நிற்கிறான். இராவணன் வருந்தாத காரணத்தால் தாழ்ந்துவிடுகிறான் என்றார்.
இரு பேச்சாளர்களுமே புதிய கோணத்தில் கம்பனின் காவியத்தை அணுகியதை பார்வையாளர்கள் வெகுவாக வரவேற்றனர்.
ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்கக்கல்லூரி மாணவி செல்வி சரண்யா முசிலா, "திரைப்பாடல்களில் கம்பனின் கவிதைகள்" என்னும் தலைப்பில் உரை ஆற்றினார்.
தமிழ் வாழ்த்துடன் தொடங்கிய விழாவில் மாணவிகள் பூஜா, கீர்த்தனாவின் நடனக் காணொளியும் ஒளியேற்றப்பட்டது. எழுத்தாளர் கழகச் செயலாளர் திருவாட்டி கிருத்திகா வரவேற்புரை ஆற்ற, துணைச் செயலாளர் திரு. கோ. இளங்கோவன் நன்றியுரை ஆற்றினார்.
எழுத்தாளர் கழகத்தின் செயலவை உறுப்பினர்கள், போட்டிகளின் நான்கு பிரிவு களிலும் வெற்றி பெற்ற மாணவர் களின் பெயர்களை அறிவித்தனர்.
மாணவர்கள் திரு. சுசூக்கி தர்மராசு மற்றும் செல்வி கீர்த்தனா நிகழ்ச்சி நெறியாளர்களாகச் செயல்பட்டனர்.