சிராங்கூன் ரோட்டில் 2018ல் நடந்த கும்பல் தாக்குதல் சம்பவத்தில் முக்கிய குற்றவாளிக்கு எட்டு ஆண்டு சீர்திருத்தப் பயிற்சி தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. அர்ஜுன் ரத்னவேலு, 27, என்ற அந்த ஆடவருக்கு 24 பிரம்படி கொடுக்கும்படியும் உத்தரவிடப் பட்டது.
அர்ஜுன், 2010 முதல் பல குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்காக நன்னடத்தைக் கண்காணிப்பு, சீர்திருத்தப் பயிற்சி, பிரம்படிகளுடன்கூடிய சிறைத்தண்டனை போன்ற பல்வேறு தண்டனைகளைப் பெற்றவர். மீண்டும் குற்றத்தில் ஈடுபட்டதால் அவருக்கு கூடுதலாக 360 நாட்கள் சிறைத்தண்டனை நேற்று விதிக்கப்பட்டது.
அர்ஜுன் ஐந்து குற்றச்சாட்டுகளின் பேரில் குற்றத்தை ஒப்புக்கொண்டார். அவருடன் சேர்ந்து குற்றம் சுமத்தப்பட்ட பிரவின் ராஜேந்திரன், 27, என்பவருக்கு நேற்று 16 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இவர், விசாரணையின் நடுவிலேயே குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
வினோத் ராஜேந்திரன், 33, என்பவருக்கும் பிரவினுக்கும் இடையில் பிரச்சினை இருந்தது. அதைத் தீர்த்து வைக்கும்படி பிரவின் அர்ஜுனை கேட்டுக்கொண்டார். அதற்கு அர்ஜுன் சம்மதித்தார்.
2018 மார்ச் 10ஆம் தேதி அதிகாலை சுமார் 3 மணிக்கு லேபான் பார்க்கில் ஒரு கத்தியுடன் வினோத் ராஜேந்திரனை அர்ஜுன் அணுகினார். தப்பித்து ஓட முயன்ற வினோத் தடுமாறி கீழே விழுந்துவிட்டார். பிரவின் முன்னிலையில் வினோத்தை பல முறை கத்தியால் அர்ஜுன் தாக்கினார்.
இரண்டாவது சம்பவம் 2018 ஜூலை 25ஆம் தேதி நிகழ்ந்தது. அர்ஜுனும் இதர நான்கு பேரும் சிராங்கூன் ரோட்டில் சாப்பிடுவதற்காக காரில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது தினிஷ் செல்வராஜா, 27, என்பவரை அர்ஜுன் பார்த்தார். அவர் பிராட்வே ஹோட்டலுக்கு எதிரே உள்ள பேருந்து நிலையத்தில் இருந்தார். அர்ஜுனுக்கும் தினிஷ் செல்வராஜாவுக்கும் இடையில் பல பிரச்சினைகள் ஏற்கெனவே இருந்து வந்துள்ளன.
தினிஷைப் பார்த்ததும் காரை நிறுத்தச் சொன்ன அர்ஜுன், காரில் இருந்து வெட்டுக்கத்தியை எடுத்துக்கொண்டார். அவருடன் இருந்த தினேஷ்குமார் ரூவே என்பவர் சமுராய் கத்தியை எடுத்துக்கொண்டார். அதே சமயம் ஷர்வின் ராஜ் சூரஜ் என்பவர் கழி ஒன்றை எடுத்துக்கொண்டார்.
விக்டர் அலெக்சாண்டர் ஆறுமுகம், ஹரிஷ் சண்முகநாதன் என்ற இதர இருவரிடம் ஆயுதம் எதுவும் இல்லை.
அந்த ஐந்து பேரும் சேர்ந்து பேருந்து நிலையத்தில் இருந்த தினிஷ் செல்வராஜாவைத் தாக்கினர். அந்தத் தாக்குதல் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அப்போது வெட்டுக்கத்தியை அர்ஜுன் தவறுதலாக கீழே விட்டுவிட்டார். ஷர்வினிடம் இருந்து லத்தியை வாங்கி அதைவைத்து செல்வராஜாவை தாக்கினார். பிறகு அவர்கள் காரில் ஏறி தப்பிவிட்டனர். அதையடுத்து மதன் ராஜ் குணசேகரன் என்ற தன் நண்பரை அழைத்த அர்ஜுன் அவரிடம் சமுராய் கத்தியையும் லத்தியையும் கொடுத்தார். இவர்கள் அனைவருக்கும் எதிராக நீதிமன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது.
இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட செல்வராஜா ஒரு வாரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதன் காரணமாக அவருக்கு வலது காலின் பாதி பாதத்தை எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. உடலின் இதர பகுதிகளிலும் காயங்கள் ஏற்பட்டன.
இந்த விவரங்கள் விசாரணையின்போது தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் ஹரிஷுக்கு மூன்றாண்டு சிறைத்தண்டனையும் ஆறு பிரம்படித் தண்டனையும் விதிக்கப்பட்டது.
விக்டருக்கு இரண்டு ஆண்டுகளுக்கும் மேற்பட்ட சிறைத்தண்டனை கிடைத்தது. ஷர்வினுக்கு சீர்திருத்தப் பயிற்சி தண்டனை விதிக்கப்பட்டது. தினேஷுக்கு எதிரான வழக்கு நிலுவையில் உள்ளது.
2018ஆம் ஆண்டில் நடந்த சிராங்கூன் ரோடு கும்பல் தாக்குதல்: