பேருந்துகளுக்குச் சேதம் விளைவித்த ஆடவருக்குத் தண்டனை
உட்லண்ட்ஸ் பேருந்து பணி மனையில் குடிபோதையில் குறும்புத்தனத்தில் ஈடுபட்டு இரண்டு பேருந்துகளைத் தாக்கி $6,200 அளவுக்குச் சேதப்படுத்திய ஸூ ஹோங்லு, 32, என்ற சீனாவைச் சேர்ந்த ஆடவருக்கு இரண்டு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. கட்டுமானத்துறை ஊழியரான இந்த ஆடவர், சம்பவம் நிகழ்ந்ததற்கு முதல் நாள் மாலை பியர் குடித்துவிட்டு சென்ற ஆண்டு நவம்பர் 22ஆம் தேதி உட்லண்ட்ஸ் பேருந்து பணிமனைக்கு வெளியே சாலை நடுவே நின்று கொண்டு பிரச்சினை ஏற்படுத்தி இரண்டு பேருந்துகளைச் சேதப்படுத்தியதாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. இந்த ஆடவர் முழு சேதத் தொகையை எஸ்எம்ஆர்டி நிறுவனத்திற்குச் செப்டம்பர் 6ஆம் தேதி கொடுத்துவிட்டார்.
கைதியின் கபால எலும்பை உடைத்தவருக்கு சிறை, பிரம்படி
சாங்கி சிறைச்சாலையில் ஒரு கைதியைத் தாக்கி மூளை யில் காயம் ஏற்படுத்திய ஆடவருக்கு ஆறு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. முகம்மது ரஹ்மட் அபுபக்கர் என்ற அந்த ஆடவருக்கு, போதைப் புழக்கம், கடன்முதலை காரியங்களில் ஈடுபட்டது தொடர்பில் சென்ற ஆண்டு குறைந்தபட்சம் ஓராண்டு சீர்திருத்தப் பயிற்சி தண்டனை விதிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் அதையும் மீறி அவர் சென்ற ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி சாங்கி சிறைச்சாலை வளாகத்தில் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டார். தாக்கப்பட்ட கைதிக்கு கபால எலும்பு முறிந்தது. காணொளி மூலம் நேற்று விசார ணையில் முன்னிலையான ரஹ்மட்டுக்கு ஆறு பிரம்படி விதிக்கப்பட்டது. இந்திரஜித் சிங் கோபால் சிங், 58, என்பவருக்கு வேண்டுமென்றே காயம் ஏற்படுத்தியதை செப்டம்பரில் ரஹ்மட் ஒப்புக்கொண்டார்.
தடம் மாறிய வழக்கு விசாரணை
எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனத்திற்கு எதிரான நான்கு நாள் வழக்கு விசாரணை நேற்று தொடங்கியதுமே தடம் புரண்டு விட்டது. மிகைநேர ஊதியம், வேலை நேரப் பிரச்சினை தொடர்பில் பேருந்து ஓட்டுநர்களுக்கும் எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனத்துக்கும் இடையில் அந்த வழக்கு நடக்கிறது.
எஸ்பிஎஸ் நிறுவனத்தை எதிர்த்து வழக்கு தொடுத்த 13 பேருந்து ஓட்டுநர்கள் சார்பில் வழக்கறிஞர் எம். ரவி முன்னி லையானார். காணொளி மூலம் விசாரணை நடந்தது. இந்த வழக்கை விசாரிக்கும் உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்ட்ரே லிம் பாரபட்சமாக நடந்துகொள்கிறார் என்றும் அவர் தன்னைத் இந்த வழக்கில் இருந்து விலக்கிக்கொள்ள வேண்டும் என்றும் அப்போது வழக்கறிஞர் ரவி கோரினார்.
நியாயமான வழக்கு விசாரணைக்கான உரிமை மீறப் பட்டு இருப்பதால் தானும் தன் கட்சிக்காரரான சுவா சிவோங் மெங்கும் இந்த வழக்கில் மேற்கொண்டு பங்கெடுத் துக்கொள்ளப் போவதில்லை என்று திரு ரவி தெரிவித்தார்.

