ஆசிய பசிபிக் தொழில்துறை உருமாற்றம் 2021 என்ற மூன்று நாள் நிகழ்ச்சி நேற்று சிங்கப்பூர் எக்ஸ்போ கண்காட்சி மையத்தில் தொடங்கியது.
பொருள், சேவை விநியோகக் கட்டமைப்பு 4.0 செயல்திட்டத்தையொட்டி பல அறிவிப்புகள் அதில் இடம்பெற்றன.
பொருள், சேவை விநியோகக் கட்டமைப்பு தடைபடாமல் பாதுகாப்புடன் இருப்பதை உறுதிப்படுத்த உதவும் தொழில்நுட்ப ஆய்வுகளில் மேற்கொள்ளப்படும் $18 மில்லியன் முதலீடு பற்றி துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் நேற்று அறிவித்தார்.
பொருள், சேவை விநியோகத்தில் எதிர்காலத்தில் பெரியளவில் தடை ஏற்படும்போது சிறிய நிறுவனங்கள் பாதிப்பில் இருந்து தப்பித்துக்கொள்ள தொழில்நுட்பம் உதவும்.
அத்தகைய சூழ்நிலை ஏற்படுவதற்கு முன்பாகவே அதுபோன்ற சூழல்களை நினைவுகூர்ந்து நிறுவனங்கள் பலவற்றைக் கற்றுக்கொள்ள முடியும்.
இதைச் சாத்தியமாக்க உற்பத்தி, விநியோகத் தொழில்துறைக் கட்டமைப்புகளுக்கு தொழில்நுட்பத்தையும் பங்காளித்துவ ஏற்பாடுகளையும் தந்து உதவும் வகையில் நேற்று பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றன.
பொருள், சேவை விநியோகக் கட்டமைப்பு 4.0 செயல்திட்டத்தின்படி, அடுத்த இரண்டு ஆண்டுகளில் $18 மில்லியன் முதலீடுகள் இடம்பெறும்.
ஏ*ஸ்டார் அமைப்பின் கீழ் வரும் அந்த முதலீட்டுக்கு சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகமும் தொழில்நுட்ப, வடிவமைப்பு பல்கலைக்கழகமும் ஆய்வுப் பங்காளிகளாக ஆதரவு அளிக்கின்றன.
நிறுவனங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு உதவும் மின்னிலக்க மற்றும் தானியக்கத் தீர்வுகளை உருவாக்குவது அந்தச் செயல்திட்டத்தின் நோக்கம்.
அதோடு மட்டுமின்றி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விநியோகக் கட்டமைப்பை மீள்திறனோடும் பாதுகாப்புடன் வைத்திருப்பதும் அதன் நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்தச் செயல்திட்டத்தில் ஈடுபட விண்வெளி, மருந்துத் துறை, துல்லியப் பொருளியல், கணினிச் சில்லு தொழில்துறைகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஆர்வம் தெரிவித்துள்ளன.
இணையம் தொடர்பிலான உணர் கருவிகளை உருவாக்குவது, கிடங்குகளை விவேகமிக்கவையாகவும் தானியக்கமயமாகவும் ஆக்குவது, ஜூரோங் புத்தாக்க வட்டாரத்துக்கான மேம்பாடுகள் உள்ளிட்ட பலவும் நேற்று வெளியான அறிவிப்புகளில் உள்ளடங்கும்.

