முழு நேர தேசிய சேவையாளரான முதல்நிலை கார்ப்பரல் லியூ காய், 22, என்பவர், பயோனிக்ஸ் காலாட்படை போர் வாகனத்தில் சிக்கி உயிர் இழந்த விபத்தில், சிங்கப்பூர் ஆயுதப் படையைச் சேர்ந்த கேப்டன் ஒருவர் குற்றவாளி என்று நேற்று விசாரணையில் தீர்ப்பளிக்கப்பட்டது.
அந்த கேப்டனின் முன்யோசனை இல்லாத செயலால் முதல் நிலை கார்ப்பரல் லியூவுக்கு மரணம் ஏற்பட்டுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
சிங்கப்பூர் கவசவாகனப் பட்டாளத்தின் 42வது படைப்பிரிவு, 2018ல் நவம்பர் 3ஆம் தேதி பயிற்சியில் ஈடுபட்டது. பயிற்சியின்போது, முதல்நிலை கார்ப்பரல் லியூவும் ஓங் லின் ஜி, 30, என்ற அந்த கேப்டனும் ஒரு லேண்ட்ரோவர் வாகனத்தில் இருந்தனர். லேண்ட்ரோவர் வாகனத்தை முதல்நிலை கார்ப்பரல் லியூ ஓட்டினார்.
அப்போது பயோனிக்ஸ் காலாட்படை போர் வாகனம் பின்பக்கமாக வந்து லேண்டரோவர் மீது ஏறிவிட்டது. அந்த விபத்தில் லேண்ட்ரோவரை ஓட்டியவர் கொல்லப்பட்டார்.
லேண்ட்ரோவருக்கும் பயோனிக்ஸ் வாகனத்திற்கும் இடையில் 30 மீட்டர் பாதுகாப்பு இடைவெளி இருப்பதை உறுதிப்படுத்த தவறி, பயோனிக்ஸ் வாகனத்தை முந்திச்செல்லும்படி லேண்ட்ரோவருக்கு உத்தரவிட்டு அதன் மூலம் முன் யோசனை இல்லாத செயலில் ஓங் ஈடுபட்டு இருக்கிறார் என்று தீர்ப்பு தெரிவித்தது.
சம்பவம் நிகழ்ந்தபோது கவசவாகன பயிற்சிப் பயிலகத்தில் கவசவாகனப் படைப்பிரிவு பயிற்சி நிலை யத்தில் பயிற்சி அளிப்பவராக ஓங் இருந்தார்.
பயோனிக்ஸ் காலாட்படை போர் வாகனத்துடன் தொடர்புகொள்ளாமலேயே முன்நோக்கிச் செல்லும்படி லேண்ட்ரோவருக்கு அவர் உத்தரவிட்டார் என்றும் அப்படி உத்தரவிடுவது பாதுகாப்பு அற்றது என்ற போதிலும் ஓங் அதைச் செய்தார் என்றும் விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளிக்கு டிசம்பர் 20 ஆம் தேதி தண்டனை விதிக்கப்படும். அவர் சேவையில் இருந்து தற்காலி கமாக நீக்கப்பட்டு இருக்கிறார்.
இந்த வழக்கு விசாரணை கடந்த ஜூன் மாதம் நடந்தபோது வழக்கறிஞர் மூலம் முன்னிலையான ஓங், பயோனிக்ஸ் வாகனம் பின்புறம் நகர்ந்து வரும் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்று தெரிவித்தார்.
இதனிடையே பயிற்சியின்போது 30 மீட்டர் பாதுகாப்பு இடைவெளி விதி முக்கியமான ஒரு பாதுகாப்பு அம்சம் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. அந்த விதியை அவசியம் கடைப்பிடிக்கவேண்டும் என்று அதிகாரி ஓங் உள்ளிட்ட கவசவாகன படை தளபதிகள் அனைவருக்கும் போதிக்கப்பட்டுள்ளது. கவச வாகனப் பயிற்சிகளுக்கு முன்னதாக பாதுகாப்பு பற்றி விளக்கம் அளிக்கப்படும். அப்போதும் அந்த விதி பற்றி மறுபடியும் வலியுறுத்தப்படும் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.