வேலையிடத்தில் காயம் ஏற்பட்டதாகக் கூறி, தாம் பணிபுரிந்த நிறுவனத்தை ஏமாற்ற முயன்றதாகத் தொடுக்கப்பட்ட வழக்கில் இருந்து இந்திய ஊழியர் விடுவிக்கப்பட்டார்.
இழப்பீடு பெறுவதற்காக போலியான கோரிக்கைகளைச் சமர்ப்பித்ததாகவும் விசாரணை அதிகாரியிடம் பொய்யுரைத்ததாகவும் கடந்த 2019 ஏப்ரல் 8ஆம் தேதி கிர்பால் சிங், 24, என்ற அந்த ஆடவர்மீது குற்றம் சுமத்தப்பட்டது.
அதே ஆண்டு பிப்ரவரி 20ஆம் தேதி பணியிடத்தில் அரைவை இயந்திரத்தை இயக்கியபோது அவரது கட்டை விரலில் காயமேற்பட்டதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை அவர் மீதான குற்றச்சாட்டுகளை மனிதவள அமைச்சின் வழக்கறிஞர்கள் திரும்பப் பெற்றுக்கொண்டனர்.
இதனையடுத்து, முன்னாள் கட்டுமான ஊழியரான கிர்பால் சிங் கடுமையாக எச்சரிக்கப்பட்டு, வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
அவர்மீதான குற்றச்சாட்டுகள் மீட்டுக்கொள்ளப்பட்டதற்கான காரணம் எதுவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படவில்லை. ஆயினும், போதுமான சான்று இல்லாததால் அவை மீட்டுக்கொள்ளப்பட்டதாக அறியப்படுகிறது என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி குறிப்பிட்டது.
இடைப்பட்ட ஈராண்டு காலத்தில், காயம் காரணமாகவும் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்ததாலும் கிர்பால் சிங் வேலையின்றி இருந்தார்.
தங்க இடமளித்த நண்பர்களின் கருணையாலும் லிட்டில் இந்தியா, பூன் கெங் வட்டாரங்களில் உள்ள கோவில்கள் இலவசமாக உணவளித்ததாலும் இந்த ஈராண்டு காலத்தைக் கடத்த முடிந்ததாக, பஞ்சாபி மொழியில் கிர்பால் சிங் சொன்னார்.
நீதிமன்றத் தீர்ப்பை அடுத்து, விரைவில் நாடு திரும்பி தம் பெற்றோரையும் தாத்தாவையும் சந்திக்கலாம் என்பதால் மகிழ்ச்சியாக இருக்கிறார் கிர்பால். இவர் எப்போது இந்தியாவிற்குத் திருப்பி அனுப்பப்படுவார் என்பது தெரியவில்லை.
நாடு திரும்பியபின் அமிர்தசரசில் சிறிய கடை வைத்து நடத்தும் தம் தந்தைக்கு உதவியாக இருப்பதாக இவர் கூறினார். இவரது குடும்பம் பொற்கோவிலுக்கு அருகே வசித்து வருகிறது.
இன்விக்டஸ் சட்ட நிறுவனத்தைச் சேர்ந்த திரு ஜோசஃபஸ் டான், திரு கோரி வோங் ஆகிய வழக்கறிஞர்கள் இலவசமாக கிர்பால் சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையாகி வாதாடினர்.