சிங்கப்பூரில் பல வங்கிக் கணக்குகளைத் திறந்து $1 மில்லியனுக்கு மேல் முறைகேடான வருமானத்தைப் பெற்ற ஒரு பெண்ணுக்கு இன்று (நவம்பர் 23) இரண்டரை ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
தற்போது 48 வயதான அன்னி ஃபூங், ஜூலை 2016ல் சமூக தொடர்புத் தளமான படூவில் சந்தித்த 'ஸ்டீவ் வில்லியம்ஸ்' என்பவரிடமிருந்து அறிவுறுத்தல்களைப் பெற்ற பிறகு குற்றங்களைச் செய்தார்.
இந்த ஆண்டு அக்டோபரில், தமக்கும் தம் மகளுக்கும் சொந்தமான வங்கிக் கணக்குகள் வழியாக முறைகேடாக கிட்டத்தட்ட $690,000 ஆதாயங்களைப் பெற அனுமதித்த ஏழு வழக்குகளில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். மீதமுள்ள தொகையுடன் தொடர்புடைய மேலும் 38 குற்றச்சாட்டுகள் தண்டனையின்போது பரிசீலிக்கப்பட்டன.
2016 அக்டோபரில், சிங்கப்பூரில் இருந்து மலேசியாவின் ஜோகூர் பாருக்கு ஒருமுறை $105,500ஐயும் மற்றொரு முறை $76,500ஐயும் எடுத்துச் சென்றதாகவும், அந்தப் பணத்தை வில்லியம்சின் செயலாளரிடம் ஒப்படைத்ததாகவும் சிங்கப்பூரரான திருவாட்டி ஃபூங் ஒப்புக்கொண்டார்.
சிங்கப்பூரில் இருந்து பணம் எடுத்துச் செல்வதற்கான பரிந்துரைக்கப்பட்ட வரம்பு $20,000 என்பதால் ஃபூங்கின் நடவடிக்கைகள் சட்டவிரோதமானவை.
வில்லியம்ஸ் ஒரு பொறியாளர் என்று அவர் நீதிமன்றத்தில் சொன்னார். மேலும், பிரிட்டிஷ் கைபேசி எண்ணைப் பயன்படுத்தி ஃபூங்குடன் தொடர்ந்து வில்லியம்ஸ் தொடர்புகொள்ளத் தொடங்கினார்.
நீதிமன்றத்தில் பேசிய தற்காப்பு வழக்கறிஞர் ரிக்கோ ஐசக், தம் கட்சிக்காரர் வில்லியம்சுடன் காதல் உறவைக் கொண்டிருந்த, விவாகரத்து பெற்றவர் என்று கூறினார்.
அவர் ஆழமான, காதல் உணர்வுகளை உருவாக்கிய ஒரு நபரால் ஃபூங் ஏமாற்றப்பட்டு கையாளப்பட்டார் என்று கூறினார். ஃபூங்குக்கு தொடர்ச்சியான மனச்சோர்வுக் கோளாறு இருப்பதாக திரு ஐசக் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
ஃபூங்கின் பிணைத்தொகை $30,000 ஆக நிர்ணயிக்கப்பட்டது. அவர் டிசம்பர் 1ஆம் தேதி அரசு நீதிமன்றத்தில் சரணடைந்து தண்டனையை அனுபவிக்கத் தொடங்க வேண்டும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது.


