நினைவிழப்பு நோயால் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் வகையில் இலவச
கைபேசிச் செயலி ஒன்றை நினைவிழப்பு நோயால் பாதிக்கப்பட்டோருக்குப்
பராமரிமப்புச் சேவை வழங்கும் டிமென்ஷியா சிங்கப்பூர் அமைப்பும் தேசிய சமூகச் சேவை மன்றமும் ஒருங்கிணைக்கப்பட்ட பராமரிப்புக்கான அமைப்பும் தொழில்நுட்ப நிறுவனமான எம்ரிக்கோவும் இணைந்து உருவாக்கியுள்ளன.
இந்தச் செயலிக்கு காரா என்று பெயரிடப்பட்டுள்ளது.
நினைவிழப்பு நோயால் பாதிக்கப்பட்டோரின் நினைவாற்றலை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை அந்தச் செயலி கொண்டுள்ளது.
நினைவிழப்பால் பாதிக்கப்பட்டோர் தங்கள் வீட்டுக்கு வழி தெரியாமல் தவித்தால் இந்தச் செயலி மூலம் அவர்களைப் பராமரிப்பவர்களுக்குப் பொதுமக்கள் தகவல் அனுப்பலாம்.
எட்டு ஆண்டுகளுக்கு முன்பு 63 வயது திருவாட்டி வோங் லாய் குவேனின் கணவரான 65 வயது திரு ஸ்டீவன் லாவுக்கு நினைவிழப்பு நோய் இருப்பது தெரியவந்தது.
அண்மைக் காலமாக திரு லாவ் வீட்டிலேயே இருக்கிறார். அவருக்கு சலிப்பு ஏற்படாமல் இருக்கவும் அவரது நினைவாற்றலை மேம்படுத்தவும் காரா செயலியை அவரது மனைவி பதிவிறக்கம் செய்து பதிவு செய்துகொண்டார்.
செயலியில் உள்ள நல்வாழ்வுத் திட்டங்கள், நடவடிக்கைகளில் தமது கணவர் ஈடுபட்டு பலன் அடைவதாக திருவாட்டி வோங் தெரிவித்தார்.
காரா செயலியைப் பயன்படுத்துவோர் கரையோரப் பூந்தோட்டங்கள் போன்ற சுற்றுலாத் தளங்களுக்கு இலவசமாகச் செல்லலாம்.
அதுமட்டுமல்லாது, அவரது பராமரிப்பாளர் என்கிற முறையில் திருவாட்டி வோங்கிற்கும் கட்டணக் கழிவுடன்
நுழைவுச்சீட்டுகள் கிடைக்கும்.