சிங்கப்பூரில் நேற்று முன்தின நிலவரப்படி மேலும் 1,461 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டது. அதற்கு முந்திய நாளில் இந்த எண்ணிக்கை 1,670ஆகப் பதிவானது.
கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதியிலிருந்து
ஒருநாளில் பதிவான ஆகக் குறைவான எண்ணிக்கை இது. செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி 1,647 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது.
நேற்று முன்தினம் நோய்வாய்ப்பட்ட 1,461 பேரில் 1,415 பேருக்குச் சமூக அளவில் பாதிப்பு ஏற்பட்டது. வெளிநாட்டு ஊழியர்கள் தங்குவிடுதிகளில் 40 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டது. வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த ஆறு பேருக்கு கிருமித்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சமூக அளவில் பாதிக்கப்பட்டவர்களில் 247 பேர் 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள்.
வாராந்திர தொற்று உயர்வு விகிதம் நேற்று 0.79ஆகக் குறைந்தது.
கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று இவ்விகிதம் 0.81ஆக இருந்தது.
மருத்துவமனைகளின் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் படுக்கைப் பயன்பாட்டு விகிதம் கடந்த ஞாயிற்றுக்கிழமை 52.9 விழுக்காடாக இருந்த நிலையில், நேற்று அது 53.5% எனச் சற்றே கூடியது.
சிங்கப்பூரில் கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 253,649ஆக அதிகரித்துள்ளது. இதற்கிடையே, கொரோனா
கிருமித்தொற்றால் நேற்று முன்தினம் 61 முதல் 105 வயதிற்குட்பட்ட மேலும் ஐவர் இறந்துவிட்டனர். சிங்கப்பூரில் கொவிட்-19 கிருமித்தொற்றால் மாண்டோர் எண்ணிக்கை 667ஆக அதிகரித்துள்ளது.
கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட 62 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்குச் செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

