கே.கே.பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் 14 ஆண்டுகாலமாக மருந்தக தொழில்நுட்ப வல்லுநராகப் பணியாற்றி வருகிறார் மில்லத் அகமது.
கொவிட்-19 தொற்று காரணமாக கடந்த ஈராண்டுகளாக ஓய்வின்றி உழைத்து வருகிறார்.
ஊரடங்கு காலகட்டத்தில் இந்தியாவில் இறந்துபோன தனது தாயாரின் இறுதிச் சடங்கில் அகமதால் கலந்துகொள்ளமுடியாமல் போனதால், அவர் பெரிதும் மனமுடைந்தார்.
அதிலிருந்து மீள எழுதத் தொடங்கியவர், 'அமராவதி' என்ற வரலாற்று நாடகத்தை எழுதி நூலாக மாற்றினார். அது விரைவில் அறிமுகம் காண உள்ளது.
தற்போதைய கொவிட்-19 சூழலில் இருந்து தனது மன நிலையை மாற்றவும் மற்றவர்களை ஊக்குவிக்கவும் ஏதாவது செய்ய வேண்டும் என யோசித்தார்.
டிசம்பர் 2020ல் நேரடி பாடல் இசையமைப்பு பதிவு நிகழ்வை உருவாக்கி, இயக்கி ஆசிய சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தார்.
ஜூன் மாத பள்ளி விடுமுறையின்போது தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான நீதிக்கதை சொல்லும் போட்டியை நடத்தி, பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழும் புத்தகப் பரிசுகளையும் வழங்கினார்.
இதைத்ெதாடர்ந்து சிங்கப்பூர் சார்பாக தனிநபர் சாதனை பற்றியும் சிந்திக்க ஆரம்பித்தார்.
கொவிட்-19 தொற்று பாதிப்பால் உலகத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களது கனவு நனவாகும் முன்பே இறந்து போயினர். அதை மனதில் வைத்து ஆங்கிலத்திலும் தமிழிலும் ஐந்து வார்த்தைகளில் மிகச்சிறிய கதையை எழுதி புதிய உலக சாதனை படைத்தார்.
நடிப்பு, ஒப்பனை, உடைகள், கலை, உதவி ஒளிப் பதிவு, பின்னணி, ஒலிக் கலவை, தலைப்பு, தயாரிப்பு வடிவமைப்பு, எடிட்டிங், கதை, திரைக்கதை, வசனம், பாடல் வரிகள், தயாரிப்பாளர், இயக்குநர் என 16 பொறுப்புகளையும் தன்முனைப்புக் குறும்படமான 'அறி'யில் செய்துள்ளார். இதன் மூலம், ஒரு குறும்படத்தில் அதிக பொறுப்புகளைச் செய்த ஒரே நபர் என்ற புதிய உலக சாதனையை அகமது படைத்தார்.
இந்தக் குறும்படம் சிங்கப்பூர் திரைப்பட விழா விருது 2021, நோபல் அைனத்துலக திரைப்பட விழா விருது 2021 ஆகியவற்றை வென்றது.
இவ்விரு சாதனைகளும் அக்டோபர் 2021ல் கலாமின் உலக சாதனைப் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அகமது தனது உலக சாதனைக்காக பிரதமர் லீ சியன் லூங் சார்பாக கலாசாரம், சமூகம் மற்றும் இளைஞர் அமைச்சிடமிருந்து வாழ்த்துக் கடிதத்தைப் பெற்றுள்ளார்.
இந்த வாழ்த்துகள் மேலும் சாதிக்கவும் சமூகத்திற்குப் பங்களிக்கவும் ஊக்கமளிப்பதாக அவர் கூறியுள்ளார்.
அவரது மனைவி திருமதி ஜீனத் பேகம் கூறுகையில், ஆரம்பத்தில் 13 வார்த்தைகள் கொண்ட கதையை எழுதி கின்னஸ் உலக சாதனைக்கு விண்ணப்பித்தார். ஆனால் கின்னஸ் அதனை ஏற்க மறுத்து, அமெரிக்க நாவலாசிரியர் எர்னஸ்ட் மில்லர் ஹெமிங்வே எழுதிய 6 வார்த்தை கதை இருப்பதாகத் தெரிவித்தது.
மறைந்த முன்னாள் இந்திய அதிபர் விஞ்ஞானி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம், "கனவு என்பது தூக்கத்தில் காண்பதல்ல; கனவு என்பது உங்களைத் தூங்கவிடாத ஒன்று," என்கிறார். அதேபோல், ஆறு வார்த்தைகளுக்குள் கதையை எழுதுவதற்காக பல நாட்கள் உறங்காமல் சிந்தித்து, இறுதியில் ஐந்து வார்த்தைகளில் கதையை எழுதி கின்னஸ் சாதனைப் புத்தகத்திற்கு விண்ணப்பித்தார்.
"ஆனால் அவர்கள், மற்றவர்களால் முறியடிக்கப்படும் சாதனைகளை மட்டுமே நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். எனவே வேறு சாதனைக்கு முயற்சி செய்யுங்கள் என்றனர். இப்போது கின்னஸில் புதிய உலக சாதனைப் படைக்க என் கணவர் திட்டமிட்டுள்ளார். அவர் வெற்றிபெற எனது ஆதரவை வழங்குவேன்," என்கிறார்.

