சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) விமான நிறுவனம், தான் அனுப்பிய மின்னஞ்சலால் பயணிகளுக்கு குழப்பம் ஏற்பட்டிருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
மலேசியாவுக்கான பயணங்களில் கொவிட்-19 நடைமுறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை மின்னஞ்சல் குறிப்பிட்டிருந்தது.
அந்த மின்னஞ்சலில், மலேசியாவுக்கான ஆகாயவழி தடுப்பூசிப் பயணத்தடத் திட்டம் சாராத பயணங்களுக்கான நடைமுறைகள் இடம்பெற்றிருந்தன. குறிப்பாக, அதில் பயணத்துக்கு முந்தைய பரிசோதனைகள், தடைக்காப்பு நடைமுறைகளில் உள்ள மாற்றங்கள் விவரிக்கப்பட்டிருந்தன.
ஆனால் அந்த மின்னஞ்சல் தவறுதலாக, தடுப்பூசிப் பயணத்தடத்தில் செல்லும் பயணிகளுக்கும் அனுப்பப்பட்டது.
மலேசியாவுடனான ஆகாயவழி தடுப்பூசிப் பயணத்தடத் திட்டத்தில், முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டோர் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள தேவையில்லை.
மலேசியாவுக்கான பயண நடைமுறைகளில் ஏற்படும் மாற்றங்களைப் பயணிகளுக்கு தெரிவிக்கும் தானியங்கு முறையில் மின்னஞ்சல் அனுப்பப்பட்டதாக எஸ்ஐஏ விளக்கமளித்தது.