கொவிட்-19 கிருமிப்பரவல் சூழலில் அதிகமான சிங்கப்பூர்வாசிகள் அமைப்பு சாராத சமூக நடவடிக்கைகளில் தொண்டூழியம் செய்ததுடன், அடித்தளத்திலிருந்து பொதுமக்கள் முன்னெடுத்த இயக்கங்களுக்கும் நன்கொடை அளித்தனர்.
பதிவுசெய்யப்பட்ட, நன்கு அறியப்பட்ட அமைப்புகளை அவர்கள் தவிர்த்தனர்.
கிருமிப்பரவல் சூழலில் தொண்டூழியமும் நன்கொடைகளும் குறைந்தன. எனினும், இடைநிலை நன்கொடைத் தொகை அதிகரித்தது.
கடந்த 2018ஆம் ஆண்டில் நன்கொடையாக அளிக்கப்பட்ட இடைநிலைத் தொகை $100 ஆகும். 2021ஆம் ஆண்டில் அது இரட்டிப்பாகி, $200 ஆனது.
தேசிய, தொண்டூழிய, நன்கொடை நிலையம் நேற்று வெளியிட்ட 2021க்கான தனிநபர் கொடை ஆய்வில் இந்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டன.
தொண்டூழியம், நன்கொடை அளித்தல் போன்றவற்றில் சிங்கப்பூர்வாசிகளின் பழக்கவழக்கங்களை அறிய இந்த ஆய்வு நடத்தப்படுகிறது. கடந்த 2000ஆம் ஆண்டு முதல் இரண்டு ஆண்டு களுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வரும் ஆய்வு, கடந்த ஆண்டு கிருமிப் பரவல் சூழலால் நடத்தப்படவில்லை.
இவ்வாண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை நடைபெற்ற ஆய்வில் 2,000 பேர் கலந்துகொண்டனர். கடந்த 12 மாதங்களில் தாங்கள் அளித்த நன்கொடை, செய்த தொண்டடூழியம் பற்றி அவர்களிடம் கேட்கப்பட்டது.
கடந்த 2018ஆம் ஆண்டு ஆய்வுடன் ஒப்பிடும்போது, தனிநபர் களுக்கு அல்லது சமூகம் ஏற்பாடு செய்த நடவடிக்கைகளுக்கு நன்கொடை தரும் போக்கு 11% உயர்ந்தது.
இத்தகையோர் அறநிறுவனம், சமய அமைப்பு போன்றவற்றின் வழி நன்கொடை அளிக்கவில்லை.
ஆனால் 2018இல் 79 விழுக்காடாக இருந்த நன்கொடை அளிப்போர் விகிதம், இவ்வாண்டு 60 விழுக்காடாகக் குறைந்தது.