தொற்றுநோய்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றவாளி என்று கண்டறியப்பட்ட 38 வயது மாதுக்கு நேற்று நீதிமன்றத்தில் ஆறு மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
ஷி ஷா எனும் அந்த மாது, கொவிட்-19 கிருமிப் பரவல் சூழலில் சுகாதாரத் துறை அதிகாரி கடமையாற்றுவதற்கு இடையூறு ஏற்படுத்தினார் என்றும் தகவல்களை மறைத்து, பொய்த்தகவலை அளித்தார் என்றும் கூறப்பட்டது.
அவரது கணவரான 40 வயது ஹுன் ஜுன்னுக்கும் நேற்று தொற்றுநோய் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஐந்து மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
அவர் மற்றோர் அதிகாரியிட மிருந்து தகவல்களை மறைத்திருந்தார்.
சீனாவைச் சேர்ந்த இருவருக்கும் நீதிமன்ற வழக்கு ஒன்றாக நடைபெற்றது. கடந்த மாதம் 26ஆம் தேதி இருவரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டதை அடுத்து, நேற்று தண்டனை விதிக்கப்பட்டது.
கொவிட்-19 கிருமிப் பரவல் சூழலில் தொற்றுநோய் தடுப்புச் சட்டத்தின்கீழ் குற்றஞ்சாட்டப்பட்ட முதல் நபர்கள் இவர்கள் ஆவர்.
ஷி ஏற்கெனவே சிங்கப்பூரில் வசித்து வந்தவர். அவரது கணவர் ஹு, கடந்த ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி வூஹானிலிருந்து இங்கு வந்தார். அவருக்கு கொவிட்-19 கிருமி தொற்றியது கண்டறியப்பட்டது. பின்னர் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
கடந்த ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை இருவரும் தங்கள் நடமாட்டம் குறித்த தகவல்களை மறைத்ததாகக் கூறப்பட்டது.

