மெக்டோனல்ட்ஸ் உணவகங்களில் கட்டணச் சேவைக்கு இடையூறு
மெக்டோனல்ட்ஸ் உணவகங்களில் தாங்கள் வாங்கிய உணவுக்கு விசா மற்றும் மாஸ்டர்கார்ட் அட்டையைக் கொண்டு நேற்று மாலை வாடிக்கையாளர்களால் கட்டணம் செலுத்த முடியவில்லை.
ஏறக்குறைய ஒரு மணிநேரம் கட்டணச் சேவைகளுக்கு ஏற்பட்ட தடையே அதற்குக் காரணம்.
விசா மற்றும் மாஸ்டர்கார்ட் பரிவர்த்தனைகள் தொடர்பில் கட்டணச் சேவையில் இடையூறு ஏற்பட்டதாக அந்நிறுவனம் மாலை 6.18 மணிக்கு அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டது.
மெக்டோனல்ட்ஸ் இணையப்பக்கம் அல்லது கைபேசிச் செயலி மூலம் உணவு வாங்கும் வாடிக்கையாளர்கள், 'அமெரிக்கன் எக்ஸ்பிரஸ்', 'பேலா' அல்லது 'கிராப்பே' உள்ளிட்ட மாற்று கட்டண முறையைப் பயன்படுத்துமாறு வாடிக்கையாளர்களுக்கு மெக்டோனல்ட்ஸ் நிறுவனம் அறிவுறுத்தியது.
பின்னர் இரவு 7.30 மணியளவில் மெக்டோனல்ட்ஸ் வெளியிட்ட மற்றொரு ஃபேஸ்புக் பதிவில், கட்டணச் சேவையில் ஏற்பட்ட இடையூறு சரிசெய்யப்பட்டுவிட்டதாகத் தெரிவித்தது.
குழப்பம் ஏற்படுத்தும் மின்னஞ்சலுக்காக மன்னிப்பு கேட்ட எஸ்ஐஏ நிறுவனம்
எஸ்ஐஏ விமான நிறுவனம் தான் அனுப்பிய மின்னஞ்சல் பயணிகளுக்கு குழப்பம் ஏற்பட்டிருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
மலேசியவுக்கான பயணங்களில் கொவிட்-19 நடைமுறை மாற்றங்களை மின்னஞ்சல் குறிப்பிட்டது.
அந்த மின்னஞ்சலில், மலேசியாவுக்கான ஆகாயவழி தடுப்பூசிப் பயணத் தடம் சாராத பயணங்களுக்கான நடைமுறைகள் இடம்பெற்றிருந்தன. குறிப்பாக, அதில் பயணத்துக்கு முன்பான பரிசோதனைகள், தடைக்காப்பு நடைமுறைகளில் உள்ள மாற்றங்கள் விவரிக்கப்பட்டன.
ஆனால் அந்த மின்னஞ்சல் தவறுதலாக, தடுப்பூசிப் பயணத்தடத்தில் செல்லும் பயணிகளுக்கும் அனுப்பப்பட்டது.
மலேசியாவுடனான ஆகாயவழி தடுப்பூசிப் பயணத் தடத் திட்டத்தில், முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டோர் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள தேவையில்லை.
மலேசியாவுக்கான பயண நடைமுறைகளில் ஏற்படும் மாற்றங்களைப் பயணிகளுக்கு தெரிவிக்கும் தானியங்கு முறையில் மின்னஞ்சல் அனுப்பப்பட்டதாக எஸ்ஐஏ கூறியது.
புதிதாக 1,782 பேருக்குத் தொற்று
சிங்கப்பூரில் நேற்று முன்தின நிலவரப்படி புதிதாக 1,782 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இது கடந்த திங்கட்கிழமை பதிவான 1,461 எனும் தொற்று எண்ணிக்கையைவிட அதிகம். சுகாதார அமைச்சு நேற்று முன்தினம் இதைத் தெரிவித்தது.
சமூகத்தில் 1,754 பேரும் வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகளில் 21 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஏழு பேர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள்.
வாராந்திர தொற்று உயர்வு விகிதம், நேற்று முன்தினம், 0.83 ஆக இருந்தது. ஒப்புநோக்க, கடந்த திங்கட்கிழமை அந்த விகிதம் 0.79 ஆக இருந்தது.
எனினும், தொடர்ந்து 11 நாட்களாக வாராந்திர தொற்று உயர்வு விகிதம் ஒன்றுக்குக் குறைவாக உள்ளது.
தீவிர சிகிச்சைப் பிரிவில் 55.2% படுக்கைகள் நிரப்பப்பட்டுள்ளன. இது கடந்த திங்கட்கிழமை காணப்பட்ட 53.5 எனும் விகிதத்தை விட அதிகம்.
இதனுடன், மேலும் ஐந்து பேர் கொவிட்-19 தொற்றால் ஏற்பட்ட உடல்நலப் பிரச்சினைககள் காரணமாக உயிரிழந்தனர். அவர்கள் 62 வயதுக்கும் 92 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். நால்வருக்கு உடல்நலப் பிரச்சினைகள் இருந்தன. ஒருவர் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்.
ஆஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதியான சிப்பி உணவு மீட்டுக்கொள்ளப்பட்டது
சாப்பிடுவதற்குத் தயார்நிலையில் இங்கு இறக்குமதி செய்யப்பட்ட சிப்பிகள் நுண்ணுயிரிகளால் ஏற்பட்ட கேடு காரணமாக மீட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.
இவை தென் ஆஸ்திரேலியாவிலிருந்து இங்கு இறக்குமதி செய்யப்படுகின்றன. சிங்கப்பூர் உணவு அமைப்பு நேற்று இதைத் தெரிவித்தது.
சாப்பிடுவதற்குத் தயார்நிலையில் உள்ள அந்தச் சிப்பிகளை விற்பனையிலிருந்து மீட்டுக்கொள்ளும்படி இங்கு இறக்குமதி செய்யும் மூன்று நிறுவனங்களிடம் உத்தரவிட்டதாக சிங்கப்பூர் உணவு அமைப்பு கூறியது.
நிறுவனங்களில் இரண்டு சிப்பிகளை மீட்டுக்கொண்டுள்ளன. இன்னும் ஒரு நிறுவனம் அப்பணியைத் தற்போது செய்து வருகிறது.
பாதிக்கப்பட்ட சிப்பிகள் கடந்த செப்டம்பர் 4ஆம் தேதி முதல் இம்மாதம் 16ஆம் தேதி வரை உற்பத்தி ஆயின.

