பத்தாண்டுகளில் நிகழ்ந்துள்ள ஆகப்பெரிய இடையூறு என கணிப்பு
டிபிஎஸ் வங்கி மற்றும் பிஓஎஸ்பி வாடிக்கையாளர்களுக்குச் சேவைத் தடங்கலை ஏற்படுத்தி கிட்டத்தட்ட 15 மணி நேரம் நீடித்த மின்னிலக்க வங்கிப் பிரச்சினை நேற்றுக் காலை மீண்டும் எழுந்தது.
இதுதொடர்பாக நேற்றுக் காலை 10.50 மணிக்கு டிபிஎஸ் தனது ஃபேஸ்புக் பதிவில் விளக்கியது.
"துரதிர்ஷ்டவசமாக எழுந்த மின்னிலக்க வங்கிப் பிரச்சினை எங்களது சேவைகளைப் பாதித்துவிட்டது. இடையில் சரிசெய்யப்பட்ட பிரச்சினை மீண்டும் தொடங்கி உள்ளது," என்று அது குறிப்பிட்டது.
சேவைத் தடங்கலால் ஏராளமான வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை அறிந்துள்ளோம்.
"பிரச்சினையைத் தீர்க்க எங்களால் இயன்ற வரை முயன்று வருகிறோம். இடையூறு எற்பட்டதற்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்
கிறோம்," என்றும் டிபிஎஸ் வங்கி கூறியது.
முன்னதாக, அதிகாலை 2 மணியளவில் சேவை சீரடைந்ததாக காலை 8.15 மணியளவில் டிபிஎஸ் தெரிவித்திருந்த நிலையில் மீண்டும் சேவைத் தடங்கல் ஏற்பட்டதாக காலை 9 மணியளவில் வாடிக்கையாளர்கள் சிலர் தெரிவித்தனர்.
அவர்களில் பெரும்பாலானோர் ஃபேஸ்புக் வாயிலாகப் புகார்களைப் பதிவு செய்த வண்ணம் இருந்தனர்.
காலை 9.15 மணியளவில் 360க்கும் அதிகமான புகார்கள் செய்யப்பட்டிருந்தன.
மின்னிலக்க வங்கிப் பிரச்சினை செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் தொடங்கியது. கடந்த பத்து ஆண்டுகளில் காணாத ஆகப் பெரிய வங்கிச் சேவை இடையூறாக இது கருதப்படுகிறது.
இதற்கு முன்னர் 2010ஆம் ஆண்டு பயனீட்டாளர் மற்றும் வர்த்தக வங்கி சேவைகள் உள்ளிட்ட எல்லாச் சேவைகளிலும் தடங்கல் ஏற்பட்டது.
சேவைத் தடங்கல் இணைய வங்கி, பேநவ் பணப் பரிமாற்றச் சேவை போன்றவற்றில் நேற்றும் பாதிப்பை ஏற்படுத்தியதாக டிபிஎஸ் சிங்கப்பூர் மேலாளர் ஷீ சே கூன் நேற்று கூறினார்.
இருப்பினும் ரொக்கம் செலுத்தும் டிபிஎஸ், பிஓஎஸ்பி வாடிக்கையாளர்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்றார் அவர். நேரடியாக வங்கியில் வழங்கப்படும் சேவை எவ்வித இடையூறுமின்றி தொடருவதாகவும் தமது ஃபேஸ்புக்கில் பதிவேற்றிய காணொளி ஒன்றில் அவர் குறிப்பிட்டார்.
"எங்களது எல்லா வங்கிக் கிளைகளிலும் வங்கிச் சேவை நேரத்தை இரண்டு மணி நேரம் நீடித்திருக்கிறோம். எங்களது தொடர்பு மேலாளர்களும் அழைப்பு மைய வாடிக்கையாளர் சேவை அதிகாரிகளும் அவசர வங்கிச் சேவைகளுக்கு உதவ தயார்நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர்," என்றார் திரு ஷீ.
சேவையை வழக்கநிலைக்கு மீட்ெடடுக்க இரவு பகலாக மூன்றாம் தரப்பு பொறியாளர் சேவை வழங்கும் நிறுவனங்களுடன் இணைந்து வங்கி நிர்வாகம் பணியாற்றி வருவதாகவும் அவர் கூறினார். தொடர்ந்து சிரமம் ஏற்படுத்தி யதற்காக வாடிக்கையாளர்களிடம் அவர் மன்னிப்புக் கேட்டுக்கொண் டார்.

