அக்டோபரில் தொடக்கப் பள்ளி இறுதித் தேர்வு (பிஎஸ்எல்இ) தேர்வு எழுதத் தொடங்குவதற்கு சில நிமிடங்கள் முன்னதாக தொடக்கப்பள்ளி 6 மாணவர் ஜெனிஃபர் முத்துராமனுக்கு கொவிட்-19 ஏஆர்டி விரைவுப் பரிசோதனை முடிவில் தொற்று உறுதி செய்யப்பட்டது.
டமாய் தொடக்கப் பள்ளி மாணவரான அவர் மலாய் மொழிப் பாடத் தேர்வு எழுத ஏற்கெனவே கிருமி தொற்றிய சக மாணவரோடு சென்றபோது பள்ளியில் கொவிட்-19 பரிசோதனை நடத்தப்பட்டது.
"எனக்கு கொவிட்-19 உறுதி ஆனதை அறிந்து அதிர்ச்சியடைந்தேன். எனது தாய்மொழி மற்றும் அறிவியல் பாடங்களை என்னால் எழுத முடியாது என்பதை அறிந்து வேதனை அடைந்தேன்," என்றார் ஜெனிஃபர், 12.
மறுநாள் அவர் அறிவியல் பாடத் தேர்வு எழுத இருந்தார்.
உடனடியாக அவரை அழைத்துச் சென்ற பெற்றோர் பிசிஆர் பரிசோதனைக்கு ஏற்பாடு செய்ததில் அதிலும் அவருக்கு தொற்று உறுதி ஆனது.
அதனைத் தொடர்ந்து மூன்று வாரங்களுக்கு இல்லத்தில் குண
மடையும் விதமாக பெற்றோரிட
மிருந்து தம்மைத் தனிமைப்படுத்திக்கொண்டார். அந்த வீட்டின் ஒரே பிள்ளை அவர்.
கொவிட்-19 பாதிப்பு காரணமாக பிஎஸ்எல்இ தேர்வின் சில பாடங்களை எழுத முடியாத இதர மாணவர்களுக்கு வழங்கப்பட்டதுபோல ஜெனிஃபருக்கும் அவர் எழுதத் தவறிய இரு பாடங்களுக்கு சிறப்பு தரப்புள்ளிகள் வழங்கப்பட்டன.
தேசிய அளவிலும் பள்ளித் தேர்வுகளிலும் அந்தப் பாடங்களில் அவர் எவ்வாறு சிறந்து விளங்கினார் என்பதன் அடிப்படையில் அந்தப் புள்ளிகள் வழங்கப்பட்டன. மொத்த மதிப்பெண்களின் அடிப்படையில் அவர் உயர்நிலைப் பள்ளியில் வழக்கநிலை தொழில்நுட்பப் பிரிவுக்குத் தகுதி பெற்றுள்ளார்.
இவரைப் போல இவ்வாண்டு சுமார் 1,070 மாணவர்கள் கொவிட்-19 தொற்று காரணமாக குறைந்தபட்சம் ஒரு பாடத் தேர்வை எழுத முடியாமல் போனதாக கல்வி அமைச்சு கூறியது. இது இவ்வாண்டு பிஎஸ்எல்இ தேர்வுக்குப் பதிவு செய்த மாணவர்களில் 2.7 விழுக்காடு. கடந்த ஆண்டு இது 0.4 விழுக்காடாக இருந்தது. அதாவது கடந்த ஆண்டு 140 மாணவர்கள் மட்டுமே இவ்வாறு பாதிக்கப்பட்டிருந்தனர்.

