உலக வளர்ச்சியில் நிச்சயமற்ற நிலை நீடிப்பதாலும் உள்ளூர் மீட்சி சீரற்றதாக இருப்பதாலும் அடுத்த ஆண்டு சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சி 3 விழுக்காட்டுக்கும் 5 விழுக்காட்டுக்கும் இடையில் மெதுவானதாக இருக்கும் என முன்னுரைக்கப்பட்டு உள்ளது.
இவ்வாண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7 விழுக்காடாக இருக்கும் என்று வரத்தக தொழில் அமைச்சு தெரிவித்தது. இது ஏற்கெனவே முன்னுரைக்கப்பட்ட 6 விழுக்காடு முதல் 7 விழுக்காடு வரை என்பதையொட்டி இந்த வளர்ச்சி விகிதம் இருக்கும். இதற்கு உற்பத்தித் துறை இட்டுச் செல்லும் ஏற்றுமதி சார்ந்த துறைகள் உதவிபுரியும்.
2022ஆம் ஆண்டில் கொவிட்-19 கொள்ளைநோய் தொடர்பான உள்ளூர் கட்டுப்பாடுகள் விமானத் துறை மீட்சிக்குத் தொடர்ந்து முட்டுக்கட்டைகளாக விளங்கும்.
உணவு, பானச் சேவைகள் மற்றும் சில்லறை வர்த்தகம் போன்ற பயனீட்டாளர்கள் நேரடியாக பங்கேற்கும் துறைகளும் சுற்றுப்பயணம் தொடர்பான துறைகளும் முழு மீட்சியடைய வாய்ப்பில்லை என்று கருதப்படுகிறது.
இது தொடர்பாக நேற்று மெய்நிகர் வாயிலாக செய்தியாளர்
களைச் சந்தித்த வர்த்தக, தொழில் அமைச்சின் நிரந்தரச் செயலாளர் கேப்ரியல் லிம், "2022 இறுதி வரை உணவு, பானத் துறைகள் கொவிட்-19 கொள்ளைநோய்க்கு முந்திய நிலைக்குத் திரும்ப வாய்ப்பில்லை.
"உணவு நிலையங்களில் உட்கார்ந்து சாப்பிடுவதற்கும் சில நிகழ்ச்சிகளை நடத்துவதற்கும் தொடர்ந்து தடை விதிக்கப்பட்ருக்கும். அதேபோல வருகையாளர் எண்ணிக்கை மீட்சியும் குறைவாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்
படுகிறது," என்றார்.
ஆகக் கடைசி வளர்ச்சி விகிதம் மூன்றாம் காலாண்டில் 7.1 விழுக்காடாகப் பதிவானது. இது ஆண்டுக்காண்டு அடிப்படையிலான வளர்ச்சி விகிதம். இதற்கு முந்திய காலாண்டின் வளர்ச்சியான 15.2 விழுக்காட்டைக் காட்டிலும் குறைவு. இருப்பினும் முன்னுரைக்கப்பட்ட 6.5 விழுக்காட்டைக் காட்டிலும் அதிகம். மொத்தத்தில் இவ்வாண்டின் மூன்று காலாண்டுகளில் மொத்த உள்நாட்டு வளர்ச்சி 7.7 விழுக்காடாகப் பதிவானதாக வர்த்தக தொழில் அமைச்சு கூறியது. அதேநேரம் காலாண்டுக்கு காலாண்டு சரிக்கட்டப்படும் விகிதத்தின் அடிப்படையில் பொருளியல் வளர்ச்சி மூன்றாம் காலாண்டில் 1.3 விழுக்காடாக விரிவடைந்தது. இரண்டாம் காலாண்டில் இது 1.4 விழுக்காடாக இருந்தது.
2022ஆம் ஆண்டில் சிங்கப்பூரின் அதிகமான தடுப்பூசி விகிதமும் கணிசமான பூஸ்டர் தடுப்பூசி வேகம் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதால் உள்நாட்டிலும் அனைத்துலக எல்லைகளிலும் உள்ள கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கப்படும் நிலையை ஏற்படுத்தக்கூடும்.
அது பயனீட்டாளர் நேரடியாகச் சம்பந்தப்பட்ட துறைகளின் மீட்சிக்குப் பெரிதும் உதவும். பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு தடுப்பூசி போட்டோருக்கான பயணத் தடம் நீட்டிக்கப்படும்போது விமானப் பயணம், வெளிநாட்டு வருகையாளர் எண்ணிக்கையில் முன்னேற்றம் காணப்படக்கூடும்.